மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில்: 2029ஆம் ஆண்டு நாமலுக்கு வாய்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதற்கு ஆதரவை வழங்கி 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு நாமல் ராஜபக்சவை தயார்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதுவே பொருத்தமான நடவடிக்கை என சமகால அரசியல் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் குழுவொன்று அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அவர் மேலும் 5 வருடங்கள் ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும்.
இந்த நிலைப்பாட்டை மாற்றினால் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் பாதியில் நிறுத்தப்படும். இதனால் நாட்டில் மீண்டும் நெருக்கடிகள் உருவாகலாம் எனவும் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் இணக்கம்
எனினும் இந்த உறுதிமொழிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடன்பாடும் தேவை எனவும், அதற்கமைய யோசனையை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர்கள் குழுவும் யோசனை தெரிவித்துள்ளது.