முட்டாள் போராட்டகாரர்களால் கோட்டாபய வீட்டுக்குச் சென்றார் - ரணில் ஜனாதிபதியாகிவிட்டார்! விமல் வீரவங்ச சீற்றம்
வழிமுறை திட்டமோ, அறிவோ இல்லாத போராட்டம் காரணமாக இறுதியில் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளதுடன் போராட்டகாரர்கள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மாளிகையை முற்றுகையிட்ட போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடாத ஜனாதிபதி வீட்டுக்கு சென்றுள்ளார்
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்திய நேரத்தை தவிர, அதற்கு முன்னர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.
அப்படி நடந்தால், ஜனாதிபதி பதவி தொடர்பில் அராஜக நிலைமையேற்படும் என்பதே இதற்கு காரணம். ஏன் இந்த விடயம் இளம் போராட்டகாரர்களுக்கு புரியவில்லை.
அவர்களுக்கு அதனை புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவோ, தெளிவோ புத்தியோ இருந்ததாக எமக்கு தெரியவில்லை. போராட்டகாரர்கள் தமது மாளிகையை முற்றுகையிட்ட போது துப்பாக்கி சூடு நடத்துமாறு உத்தரவிடாத ஜனாதிபதி வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஞானமில்லாத, நோக்கமில்லாத, அறிவில்லாத போராட்டகாரர்களின் செயற்பாடுகளின் பிரதிபலனாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார்.
ரணிலுக்கு வாக்களிக்க காரணம் என்ன
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏன் வாக்களிக்கப்பட்டது. அதற்கு பொதுவான காரணம் இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் தமது பாதுகாப்பு தொடர்பான மனநிலை. எல்லாவற்றுக்கும் முதல் இந்த நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும்.
இந்த மனநிலையை ஏற்படுத்தியது யார். போராட்டகாரர்கள். இரவு வீடுகளுக்கு சென்று தீயிட்ட குழுவினர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட சுனில் ஹந்துன்நெத்தி, லால் காந்த போன்ற சென்றிருந்தனர்.
நாடாளுமன்றத்தை மற்றுமொரு ஜனாதிபதி செயலகமாகவும் ஜனாதிபதி மாளிகையாகவும் மாற்ற அவர்கள் முயற்சித்த நேரத்தில் அதற்கு இடமளிக்காது, அவசரகாலச் சட்டம், ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவுகளை பிறப்பித்தது, ரணில் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
அரசியல் நிகழ்ச்சி நிரல், எதிர்கால நோக்கம், விமர்சன ரீதியிலான வாசிப்பு என்று எதுவுமில்லாத காதில் தோடுகளை அணிந்த தாடிகாரர்கள் வீரர்களாக மாறி, அழகான கதைகளை கூறி, சமூக செயற்பட்டாளர்கள், நடிகர், நடிகைகள் வந்து தூண்டி விட்டு, இறுதியில் ரணிலை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர வழியை ஏற்படுத்தினர் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.