விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு டெலிகொம் நிறுவனத்தை விற்க முயற்சி: பொன்சேகா குற்றச்சாட்டு
டெலிகொம் நிறுவனத்தை முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு விற்க ஜனாதிபதி முயற்சிப்பதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம் (22.06.2023) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வது தொடர்பில் இங்கிலாந்தில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய நபருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.
டெலிகொம் நிறுவனத்தை கையளிப்பதற்கு எதிர்பார்க்கும் நபரை இங்கிலாந்தில் சந்தித்துள்ளார். இவர் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணப்பரிமாற்றம் செய்தவர். அங்கு அவருக்கு தொலைக்காட்சி நிலையம் உள்ளது. இந்த டெலிகொம் நிறுவனத்தை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விற்கப் போகிறார்.
ஜனாதிபதி ரணில், உள்ளூர் வளங்களை விற்பதை எதிர்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார். இது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கூற்றாகும்.
ஜனாதிபதி தற்போது ராஜபக்ச வாரிசு ஒன்றை காவிக் கொண்டு தொங்கு பாலத்தைக்கடக்க முயற்சிக்கின்றார்.
சட்டத்தைப் பற்றி பேசி பயனில்லை. தங்கத் திருடனை எப்படிப் பாதுகாத்து இந்தச் சபைக்கு அழைத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம். இவற்றைச் செய்வதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
மக்களின் இக்கட்டான சூழ்நிலையை மக்கள் புரிந்து கொள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டும். பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை.
ஆனால் அரசாங்கம் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்து மக்களை ஒடுக்க முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |