ரணில் - அநுர கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் - சஜித் பிரேமதாச
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தந்திரக் கூட்டணியைத் தோல்வியடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெபரவெவ நகரில் நடைபெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிசவாதத்துக்கும், வன்முறைக்கும், மிலேச்சத்தனத்துக்கும் மக்கள் ஆதரவு அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம்.
எரிபொருள் நிவாரணம்
பொதுமக்களின் யுகத்துக்காக எந்தச் சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தற்போது நாட்டைத் தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள். ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி விவசாயக் கடனை இரத்துச் செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.
குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும் இவர்கள் எதிராக இருக்கின்றனமையாலே தற்போது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.
ரணில் - அநுர கூட்டணி
மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை ரணிலும், அநுரவும் விரும்புகின்றார்கள். வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள்.
எனவே, இந்த ரணில் - அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வியடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய யுகத்துக்குப் பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |