சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன் சுடப்பட்ட நாளில் வெளியேறிய முக்கியஸ்தரின் நெகிழ்ச்சியான பதிவு
தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு மட்டக்களப்பிலிருந்து விடைபெறுகிறேன், 18 ஆண்டுகளுக்கு முதல் இதே தினத்தில் தான் மட்டக்களப்பிலிருந்து நான் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என மூத்த பத்திரிகையாளர் துரைரட்ணம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
எனது வாழ்வின் திசையை மாற்றிப்போட்ட நாள். நாம் நேசித்த மண்ணை விட்டு திக்கு திசை தெரியாத தூரத்தில் தூக்கி எறியப்பட்ட நாள். 31.05.2004 அன்று ஊடகவியலாளர் ஐ.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.
சுட்டுக் கொல்லப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன்
மட்டக்களப்பு எல்லை வீதியில் இரத்த வெள்ளத்தில் நடேசனின் நெடும் உடல் வீழ்த்தப்பட்ட நாள். நாம் எல்லாம் கலங்கி நின்ற நாள். அடுத்த கணப்பொழுதுகள் என்ன நடக்கும் என தெரியாது திகைத்து நின்ற நாள்.
நடேசனின் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பின்னர் அன்று மாலை வீட்டுக்கு சடலத்தை எடுத்து சென்ற போது அங்கு நின்ற தம்பி நிராஜ் கூறிய வார்த்தைகளும் அன்பான கட்டளையும் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.
அண்ணன் உடனடியாக மட்டக்களப்பை விட்டு போய்விடுங்கள், இனியும் இவ்வாறான இழப்பை தாங்க முடியாது. கொலை வெறி பிடித்தவர்களின் முன் நீதி நியாயத்தை தர்மத்தை போதித்து கொண்டிருக்க முடியாது.
உங்கள் மனைவி பிள்ளைகளுக்காக எங்களுக்காக உடனடியாக மட்டக்களப்பை விட்டு வெளியேறி விடுங்கள் என தம்பி நிராஜ் உரிமையோடு இட்ட கட்டளை. மறுநாள் நடேசனின் உடலுடன் மட்டக்களப்பை விட்டு நானும் நண்பர் தவராசாவும் வெளியேறினோம்.
மீண்டும் இந்த மண்ணுக்கு வர முடியாத சூழலில் சரியாக ஒரு மாதத்தில் விக்ரர் ஐவன், சுனத்த தேசப்பிரிய உட்பட சிங்கள நண்பர்களின் முயற்சியினால் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊடாக சரியாக 32 நாட்களின் பின் 02.07.2004 அன்று சுவிஸ் நாட்டில் கால் பதித்தோம்.
கண்ணை கட்டி திக்கு தெரியாத காட்டில் தூக்கி எறிந்ததை போன்ற உணர்வு. எங்களை போன்று வேதா, நிராஜ், சந்திரப்பிரகாஜ் உட்பட மட்டக்களப்பில் இருந்த தமிழ் ஊடகவியலாளர்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர்.
18ஆண்டுகளின் பின் மீண்டும் இந்த மண்ணில் நான்
அரசியல்வாதிகளால் ஆயுதக்குழுக்களால் இப்போதும் ஊட்கவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படும் சம்பவங்களையே காண முடிகிறது. நடேசன் உட்பட கல்விமான்கள் தொண்டு நிறுவன பணியாளர்கள் அப்பாவி பொதுமக்கள் என பலர் இந்த மண்ணில் கொல்லப்பட்டனர்.
இந்த கொலைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த நாட்டின் நீதி துறையால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த நிலையிலேயே நாம் நிற்கிறோம். நடேசன், யோசப் பரராசசிங்கம் உட்பட பல உயிர்களை காவு கொண்டவர்களையே தங்கள் பிரதிநிதியாக மட்டக்களப்பில் உள்ள ஒரு பகுதி மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தாம் சில மாயைகளுக்குள் தள்ளப்பட்டு தவறு செய்து விட்டோம் என அந்த மக்களின் பெரும்பாலானர்கள் இப்போது உணர்ந்து வருகிறார்கள். இது மட்டக்களப்பில் ஒரு புதிய மாற்றம்.
மட்டக்களப்பில் புதிய மாற்றம்
குறிப்பாக மட்டக்களப்பு இளைஞர்களிடம் இந்த மாற்றத்தை காண முடிகிறது. இனப்பற்றும் வீரமும் விளைநிலமான மட்டக்களப்பு மண்ணில் புதிய மாற்றம் ஒன்று வரும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.
இந்த மண்ணில் நடந்த கொலைகளுக்கு நீதி வேண்டி எப்போது மட்டக்களப்பு மக்கள் போராடப் போகிறார்கள்? நடந்த கொடூரங்களுக்கு கொலைகளுக்கு நீதித்துறையின் மூலம் நீதி கிடைக்காவிட்டாலும் மட்டக்களப்பு மக்கள் மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மட்டக்களப்பிலிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.
அராஜகம் தலைவிரித்தாடினாலும் என்றோ ஒரு நாள் தர்மம் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
