அர்ச்சுனாவால் சீமானுக்கு கொலை மிரட்டல்.. வேல்முருகன் விடுத்துள்ள கடும் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், "நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களுடைய அரசியல் உரிமை, மொழி உரிமை, நில உரிமை மற்றும் வாழ்வுரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
இந்தியப் பெருநிலத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் நமது தொப்புள் கொடி உறவுகள் இன்னமும் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். பல தலைமுறைகள் கடந்தும் முழுமையான மனித உரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் வாழ வேண்டிய துயர்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஈழத்தமிழர்களின் நிலை..
இந்த அத்தனைக் கொடுமைகளும் சகோதர யுத்தங்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும், இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலும் நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

தமிழர்களைத் தமிழர்களுக்கே எதிராக நிறுத்திய அரசியல் சூழ்ச்சிகளே தமிழினத்தின் அழிவை விரைவுபடுத்தின. இன்றும் அதே வேலையைச் செய்ய சில சக்திகள் துடிக்கின்றன. தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க, தமிழர்களையே கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
நமது கை விரல்களைக் கொண்டு நமது கண்களைக் குத்த முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்த் தேசிய அரசியல் வளர்ச்சி நிலைக்கு வருவதை விரும்பாத, அதை ஏற்றுக்கொள்ள முடியாத சக்திகளின் பின்புலத்தோடு இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்களைப் பயன்படுத்தி இப்படியான பிளவுபடுத்தும் அரசியல் நடத்தப்படுகிறதோ என்றே தோன்றுகிறது.
ஒரு போதும் தமிழினம் இப்படியான செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது. இன ஒற்றுமையைச் சிதைக்கும் எந்தப் பேச்சும், எந்த அரசியலும், எந்தத் தூண்டுதலும், தமிழர் வரலாற்றின் வலியை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆபத்தான செயலாகும். இந்தச் சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் தமிழ்நாட்டிலும் இலங்கை நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கும் பேச்சுக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை.
மன்னிப்பு கோர வேண்டும்..
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை குறிவைத்து “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டு இருப்பேன்” எனவும், ஒருமையில் தரக்குறைவாகவும் பேசியிருப்பது அரசியல் நாகரிகத்திற்கும் சனநாயக மரபுகளுக்கும் முற்றிலும் எதிரானது. ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், இன்னொரு நாட்டின் அரசியல் கட்சித் தலைவரை கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது சாதாரணமானதல்ல.

இதனைச் சம்பந்தப்பட்ட அரசுகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன என்றால், அது தமிழர்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டு மக்களின் மனநிலையையும் மதிக்காத அணுகுமுறையாகவே பார்க்கிறோம்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் இராமநாதன் அர்ச்சுனாவின் இந்தப் பேச்சை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
அவர் உடனடியாக, தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழர் இனம் தனது விடுதலைப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்ததற்கான முக்கிய காரணம் சகோதரத் துரோகமும், ஒற்றுமையின்மையும் என்பதனை இந்த நேரத்தில் மீண்டும் ஆழமாக பதிவு செய்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam