கல்வி மற்றும் விளையாட்டு மூலம் போதைப்பொருளை இல்லாதொழிக்கலாம் - அமைச்சர் சந்திரசேகர்
கல்வியும், விளையாட்டும் சிறந்து விளங்கும் சமூகத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விடயங்களுக்கு இடமிருக்காது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
எனவே, கல்வி மற்றும் விளையாட்டு மூலம் போதைப்பொருளை இல்லாதொழிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (27.12.2025) காலை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கல்வி
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விக்காக எமது சமூகம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கின்றது. முதலாம் ஆண்டு முதல் உயர்தரம் வரை தமது பிள்ளைகளுக்காக தாய்மாரும் மீண்டும் கல்வி கற்கின்றனர். தமது பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக கஷ்டப்படுகின்றனர்.
கல்வியில் யாழ்ப்பாணத்துக்கென தனி இடம் - தனித்துவம் உள்ளது. சிறந்த கல்விமான்கள் உருவாகியுள்ளனர். எனவே, கல்வியில் நாம் பின்னடைந்துவிடக்கூடாது. இது விடயத்தில் எமது மாணவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. அறிவு பசிக்கு கல்வியே சிறந்த தீர்வு.
போதைப்பொருள்
அதேபோல விளையாட்டு துறை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டு மிக முக்கியம். கல்வி, விளையாட்டுமூலம் ஆரோக்கியமான சமூகத்தை நாம் உருவாக்கும் போது போதைப்பொருள் தானாகவே அழிந்துவிடும்.
கல்வியில் பின்தங்கி இருப்பவர்களே கலாசார ரீதியிலும் பின்னடைந்து தவறான வழியில் செல்லும் நிலை காணப்படுகின்றது என கூறியுள்ளார்.






