அரசுக்கு எதிரான பேரணியில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்! திலித் ஜயவீர எம்.பி. தெரிவிப்பு
அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் நாங்கள் பங்குபற்றப் போவதில்லை, ஏனெனில் முறையான கொள்கை ஏதும் இல்லாமலே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்றிணைகின்றன என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சிறந்த திட்டங்களுக்கு ஆதரவு
அவர் மேலும் கூறுகையில், "அரசின் அனைத்து கொள்கைத் திட்டங்களையும் எதிர்க்கும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.
தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த அரசிடம் எவ்வித திட்டங்களும் கிடையாது. கடந்த அரசு எவ்வாறு செயற்பட்டதோ அதேவகையில்தான் இந்த அரசும் செயற்படுகின்றது.

கடன் பெறுவது பிரதான இலக்கு
பெற்றுக்கொண்ட அரச முறைக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால்தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. இந்த அரசும் கடன் பெறுவதையே பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. அரசின் செயற்பாட்டை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பலமாக இல்லை.
அவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி அரசுக்கு எதிராகப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்தப் பேரணியில் நாங்கள் பங்குபற்றப் போவதில்லை. ஏனெனில் எதிர்க்கட்சிகளிடம் உறுதியான கொள்கை கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |