அமைச்சரின் பெயரை வைத்து பாரிய மோசடி.. அவதானம் தேவையென வலியுறுத்து
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களிடம் பணம் கோரும் மோசடி நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பொது பதிவில், தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பொய்யாகக் கூறி நிதி உதவி மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவது குறித்து மறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேலும், பணம் அல்லது முக்கியமான தனிப்பட்ட விபரங்களை தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், இவ்வாறான குற்ற சம்பவங்களைத் தடுக்க, சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாக பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு பிரதி அமைச்சர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
அத்துடன், மோசடிகளில் இருந்து மற்றவர்களைப் பாதுகாக்க, விழிப்புடன் இருக்கும் அதேநேரம், எச்சரிக்கையைப் பகிருங்கள் என அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.