சுரேஷ் சலே கைது வெறும் கண்கட்டு வித்தையே..! ராஜித சேனாரத்ன பகிரங்கம்
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் விவகாரத்தில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது, ஏனைய சம்பவங்களைப் போன்று வெறும் கண்காட்சியாக அமைந்துவிடக்கூடாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று(27.02.2026) கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே எந்தவொரு சாட்சியங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்பது எமக்குத் தெரியாது.

எமது ஆட்சியின் போதே இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் மற்றுமொரு குழு இருக்கலாம் என்ற சந்தேகத்தை நாம் வெளியிட்டிருந்தோம். குறிப்பாக, மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திலிருந்தே இந்தத் தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஆரம்பத்தில் அந்தச் சம்பவம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
மோசடிகளை மறைப்பதற்கான நுட்பமா இது?
ஆனால், அன்று நாம் அதனை நம்பவில்லை. பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அது சஹ்ரான் குழுவினரின் செயல் என்பது உறுதியானது.
அந்த அறிக்கையில், ஆரம்பத்தில் இராணுவத்தினர் எவ்வாறு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்த முற்பட்டனர் என்ற கேள்வி எழுகின்றது.

செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காகச் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது. இந்த நடவடிக்கை வெறும் கண்கட்டு வித்தையாக இருக்கக் கூடாது.
நாட்டில் தற்போதுள்ள நிலக்கரிப் பிரச்சினை போன்ற மக்கள் பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காக இந்தக் கைது பயன்படுத்தப்படக் கூடாது. முறையான விசாரணைகள் மூலம் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டியது அரசின் கடமையாகும் என்றார்.