சரியான செயற்திட்டங்கள் இன்றி ரணிலுடன் இணைவதில் அர்த்தமில்லை: ராஜித சேனாரத்ன
சரியான செயற்றிட்டங்கள் இன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவதில் அர்த்தமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றையதினம் (20.02.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “நாட்டை மீட்பதற்கான தெளிவான திட்டம் தற்போதைய ஜனாதிபதியிடமோ அல்லது அரசாங்கத்திடமோ இல்லை. இந்த நாட்டை காப்பாற்ற அனைவரும் அரசியல் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு குறுகிய காலத்திற்கு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
ரணிலுக்கு பாராட்டு
இந்த நாட்டை மீட்டெடுத்த பிறகு உங்களது சொந்த அரசியல் பயணத்தை மேற்கொள்ளலாம். இன்று இந்த நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் பிழைக்க கஷ்டப்படுகிறார்கள். நமது தனிப்பட்ட அரசியலுக்கு முன் நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
கோட்டாபய ராஜபக்சவுக்குப் பிறகு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வந்தார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கூட்டு வேலைத்திட்டம்
ஆனால், இந்த நாட்டை மீட்பதற்கான நிலையான திட்டம் எவரிடமும் இல்லை. இந்த நாட்டை அரசியல் கோணங்களில் பார்க்காமல் அனைவரும் ஒரே கொள்கைக்கு வரவேண்டும்.
நல்லதைச் செய்யும்போது, எதிர்த்து நின்று இழுத்தடித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்தாலோசித்து கூட்டு வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |