அனுமதியின்றி ட்ரோன் கமரா பறக்கவிட்ட வெளிநாட்டவர் கைது
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள செக் நாட்டு பொறியியலாளர் ஒருவர் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிவில் விமான சேவை அதிகார சபை ஆகியவற்றின் அனுமதியின்றி குறித்த நபர் கல்பிட்டிய, கண்டல்குளி பிரதேசங்களில் ட்ரோன் கமராவைப் பறக்கவிட்டு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் கல்பிட்டிய பொலிஸார், குறித்த சுற்றுலாப் பயணி தங்கியிருந்த இடத்தைச் சோதனையிட்டு அவரைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் செக் நாட்டு சுற்றுலாப் பயணி என்றும் 67 வயதான அவர் ஒரு பொறியியலாளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டிய கண்டக்குளி பிரதேசத்தின் இயற்கைக் காட்சிகளை படமாக்கவே ட்ரோன் கமெராவைப் பறக்கவிட்டதாக அவர் தெரிவித்துள்ள போதும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ட்ரோன் கமராவில் இருந்த காட்சிகளை பொலிஸார் அழித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் கல்பிட்டி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |