"இரண்டாம் ராஜபக்சரின் அரசாங்கம்" சர்வதேசத்துக்கு தீனி போடுவதாக குற்றச்சாட்டு!
இலங்கையில் ஆட்சி செய்யும் இரண்டாம் ராஜபக்சர்களுக்கு தற்போது பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள இடைவிடாத கஸ்டங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடன்கள் மற்றும் வெளிநாட்டு நாணய நெருக்கடி என்பன இரண்டாம் ராஜபக்சர்களின் ஆட்சிக்கு சவாலாக அமைந்துள்ளதாக நாளிதழ் ஒன்று கூறுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் இந்த சவால்களில் அடங்குகின்றன.
இரண்டாம் ராஜபக்ச அரசாங்கத்தினால் சிறுபான்மையினரை மட்டும் வெற்றி கொள்ள முடியவில்லை,
அதேநேரம் பெரும்பான்மையினரின் கணிசமான பிரிவினரும் இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் சர்வதேச தொழிலாளர் உடன்படிக்கைகளை புறக்கணித்து அத்தியாவசிய சேவைகளில் தொழிற்சங்க வேலைநிறுத்தங்களை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறுவதும், அரசியல் எதிரிகள் மற்றும் ஊடக எதிரிகள் தாக்கப்படுவது மற்றும் வெள்ளை வேன் கலாச்சாரத்தை நினைவுகூருவதும், நாட்டிற்குள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அலைகளை உருவாக்கி வருகின்றன.
இது, ஏற்கனவே இரண்டாம் ராஜபக்சர்களின் அரசாங்கத்தின் மீது குற்றத்தை சுமத்திக்கொண்டிருக்கும் வெளிநாடுகளுக்கு தீனியாக அமைந்துள்ளது.
இதற்கு மத்தியில் மேற்கத்திய உலகின் ஆர்வமுள்ள மனித உரிமை ஆர்வலர்களை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு குறை கூறுவது அல்லது போரின் போது உதவாமைக்காக இங்கிலாந்தை குறைக்கூறுவது என்பன எந்தவகையிலும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவப்போவதில்லை.
இலங்கை, தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடியின் கீழ் பலவீனமான பேரம் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.



