கலிங்க மாகன் பரம்பரையின் ராஜபக்சவினர் நாட்டை அழித்தனர்-சஜித்
கலிங்க மாகன் பரம்பரையின் ராஜபக்சவினர் நாட்டை அழித்தனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்டம் வெல்லவாய தொகுதி அதிகாரச் சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்சவினரால் நாட்டின் கமத்தொழில் முற்றாக அழிக்கப்பட்டது

மலை நாட்டு புரட்சியின் போது வெள்ளையர்கள் மாத்திரமல்லது கலிங்க மாகன் நாட்டின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பின் போது நாட்டின் அனைத்து பயிர் செய்கைகளையும் அழித்த போல, கடந்த காலத்தில் ராஜபக்சவினரால் நாட்டின் கமத்தொழில் முற்றாக அழிக்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அவரையும் நாட்டையும் கைவிட்டு தப்பியோடிய பசில் ராஜபக்ச மீண்டும் புதுமையான மாற்றத்தை செய்வதற்காக வருகிறார் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் அன்று கூறினார்.
எனினும் பசில் ராஜபக்ச வந்து நாட்டை வங்குரோத்து அடைய செய்த குற்றத்தின் பிரதான குற்றவாளி என்பதுடன் மிக மோசமான ஊழல்வாதி.
வரி விதிப்புகளை ஐ.மக்கள் சக்தி ஏற்காது

டொலர்களை சம்பாதிக்கும் சுற்றுலாத்துறை, தகவல் தொழிற்நுட்பம், ஆடை உற்பத்தி உட்பட ஏற்றுமதி துறைகளுக்கு அதிகளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த செயலை எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளாது.
ஆட்சி அதிகாரம் இல்லாத போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்காக பாரிய வேலைகளை செய்ய முடியும் என்பதை செயலில் நிரூபித்து காட்டியுள்ளது எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.