ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறது:சஜித் பிரேமதாச
ராஜபக்ச நிழல் அரசாங்கம் அரச வன்முறை மற்றும் அரச மிலேச்சத்தனத்தை பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் சட்டத்தரணிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய தோற்றத்தை உருவாக்கியுள்ள அரசாங்கம்
ஜனநாயகத்தை மதிக்காத புதிய தோற்றத்தை அரசாங்கம் ஜன சமூகத்திற்குள் உருவாக்கியுள்ளது. இதனால், அதற்கு எதிராக வலுவாக குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் பொது சமூகம் வீதிகளில் வதைகளுக்கு உள்ளாகி வருகின்றது.
இப்படியான நிலைமையில் சட்டத்தரணிகள் சமூகத்திற்கு பாரதூரமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் வாழும் உரிமைக்காக சட்டத்தரணிகள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்க முயற்சிக்கும் செய்தி
கொள்கை ஒன்றை கொண்டிருக்கவும் கருத்துக்களை வெளியிடவும் பேச்சுரிமையும் ஜனநாயக உரிமைகளும் இல்லை என்ற செய்தியை அரசாங்கம் மக்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது.
நாட்டின் சட்டத்தரணிகள் சமூகம் மட்டுமின்றி முழு நாட்டு மக்களும் அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.