விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் அவரிடமும் டொலரை கேட்டிருப்பார்கள்! தென்னிலங்கையில் வெளியான தகவல் (Video)
"நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சிக்குச் சென்றுள்ளது. பிறந்துள்ள புதிய ஆண்டில் இந்த அரசு ஆட்டம் காண்பது உறுதி." என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. அவரால் சுயமாகச் சிந்தித்துச் செயற்பட முடியவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி செயலாளர் பதவியை மாற்றினால் சரியா? பிரச்சினைகள் தீருமா?
பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய ஒருவரை புதிய செயலாளராக நியமிப்பதன் மூலம் நெருக்கடி தீர்ந்துவிடுவா? நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்களுக்கு கடும் நெருக்கடி. உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஊழல், மோசடிகளும், முறையற்ற அபிவிருத்திகளும் நெருக்கடி நிலைமைக்குக் காரணம். தற்போது பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் டொலரை வழங்குமாறு அவரிடமும் இந்த அரசு கோரியிருக்கும்.
அதற்குப் பதிலீடாக வடக்கு, கிழக்கு கையளித்திருக்கும்.
ஏனெனில் இன்று நாட்டிலுள்ள பெறுமதியான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு
வருகின்றன" என தெரிவித்துள்ளார்.