ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் குடும்பத்துடன் சுட்டுக்கொலை! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
மாத்தறை, மித்தேனியாவில் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான நபரும் அவரின் பிள்ளைகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நபராகவும், போராட்டத்தின் போது தங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீப்பிடிக்காமல் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்ததாகவும் கூறப்படும் கஜ்ஜா என்ற அருண பிரியந்த, 9 வயது மகன் மற்றும் அவரது 6 வயது மகள் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மித்தேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலராக மித்தேனியா மற்றும் தங்காலையை ஆக்கிரமித்து வந்த கஜ்ஜா, சமீப காலமாக ராஜபக்ச குடும்பத்துடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்ய திட்டம்
இதனை யூடியூப் ஊடக சேவைக்கு அளித்த பேட்டியிலும் உயிரிழந்த கஜ்ஜா வெளிப்படுத்தியிருந்தார்.
தன்னைக் கொலை செய்ய ஒரு திட்டம் இருப்பதாகவும், அந்த ஒப்பந்தம் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் கஜ்ஜா கூறியிருந்தார்.
போராட்டத்திற்கு பிறகு அவர் வேறொரு அரசியல் குழுவில் சேர்ந்து கொழும்பில் உள்ள ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தில் ஒளிந்து கொண்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
தங்காலை மற்றும் மாத்தறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய மகேஷ் சேனாரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக அவர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டார்.
மகேஷ் சேனாரத்ன தற்போது ஊவா மாகாணத்தில் பணியாற்றி வருகிறார்.
கஜ்ஜா கைது
கஜ்ஜா கைது செய்யப்பட்டதன் காரணமாக, சம்பந்தப்பட்ட அரசியல் அதிகாரசபை ஒன்று மகேஷ் சேனாரத்ன மீது ஓரளவு அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கஜ்ஜாவை அரசியல்வாதிகள் விடுவிக்கத் தவறியதால், கஜ்ஜா அரசியல்வாதிகள் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த நிகழ்வுகளின் அடிப்படையில் அவர் யூடியூப் சேவை கலந்துரையாடலில் அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கஜ்ஜா மூன்று பிள்ளைகளின் தந்தையாகும். அவரது மனைவி வெளிநாட்டில் உள்ளார்.
அவர் தனது பிள்ளைகளுடன் மித்தெனிய, கல்பொத்த யாயவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது மூன்று பிள்ளைகளுடன் இரவு உணவு வாங்குவதற்காக தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூத்த மகள் கொத்து சாப்பிட்டு முடிக்கும் வரை ஹோட்டலுக்கு அருகில் அவர் நின்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் T-56 துப்பாக்கியால் சூடு நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு
40 வயதான கஜ்ஜா பல துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 6 வயது சிறுமி வீரகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக தங்காலை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த விதானகமகே கலிந்து அமேஷ் என்ற 9 வயது சிறுவன் எம்பிலிப்பிட்டிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபருக்கு எதிராக, உரிமம் இல்லாத T-56 துப்பாக்கியை வைத்திருந்தமை உட்பட, அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருந்த பல வழக்குகள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.