வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 2035 குடும்பங்களை சேர்ந்த 7416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக, 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது . சாவகச்சேரி, ஊர்காவல்துறை, உடுவில், கோப்பாய் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, சங்கானை, காரை நகர், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.
செய்தி - கஜி, தீபன், ராகேஷ்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் 16 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.உயர் தர பரீட்சைக்கான மத்திய நிலையங்கள் இல்லாத பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள்,பொது மண்டபங்கள் இவ்வாறு தற்காலிக பாதுகாப்பு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து கடற்றொழிலாளர்களை மறு அறிவித்தல் வரை கடற்தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செய்தி - ஆஷிக்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டார வன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தாெடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில் உள்ள மக்களை அயலிலுள்ள பாடசாலைக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல் விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் அனர்த்த கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து குறித்த கிராம மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடதக்கது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் நந்திக்கடல் நீர் ஏரியும் சாலை கடல் நீரேரியும் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன
செய்தி - சதீசன்
வவுனியா
ஒமந்தை, பாலமோட்டை பகுதியில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் உடைப்பெடுத்தமையால் இக்குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளது.
வவுனியாவில் தொடந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஓமந்தை, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அக் குளத்தின் கீழான 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளதுடன், அப் பகுதிக்கான வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.
செய்தி - திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |