பொதுமுகாமையாளரை நீக்குமாறு கோரி தொடருந்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு
தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரை பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தொடருந்து தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை அறிவித்துள்ளன.
தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்ததால், ஒருங்கிணைந்த தொடருந்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அடையாள வேலைநிறுத்தத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன.
போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் ஒருங்கிணைந்த புகையிரத திணைக்கள தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு விசேட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் அந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
முக்கிய கோரிக்கை
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொடருந்து துறையில் நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள், ஊழியர் பிரச்சினைகள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் பல சிரமங்களை விளக்கினர்.

மேலும், தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையளரின் நிர்வாகத்தின் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லாததால், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதே தங்களின் முக்கிய கோரிக்கை என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பு அல்ல என்றும், திறமையான மற்றும் நம்பகமான சேவையை நிறுவுவதன் மூலம் பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்குவதும் தொடருந்து துறையை மீண்டும் நிலைநிறுத்துவதும் இதன் முதன்மை நோக்கம் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.