புகையிரத அதிபர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டம்! (Photos)
புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் புகையிரத கடவுச்சீட்டு வழங்கும் பணியினை இடைநிறுத்தி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கவனயீர்பு போராட்டமானது, புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையகம்
புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் புகையிரத கடவுச்சீட்டு வழங்கும் பணியினை இடைநிறுத்தி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் நடைபெற்ற போதிலும் புகையிரத பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பயணிகள் இன்று (24) புகையிரதத்தில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மலையக புகையிரத நிலையங்களில் அதிகமானவற்றில் இன்று வருகை தந்த புகையிரத பயணிகளுக்கு புகையிரத கடவை சீட்டுக்கள் வழங்கப்படவில்லை.
மேல் வட்டவளை,ரொசல்ல உள்ளிட்ட ஒரு சில புகையிரத நிலையங்களில் மாத்திரம் டிக்கட்கள் வழங்கப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் இதனை நத்தார் பரிசாக கருதுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த போராட்டம் இன்று நாளையும் நடைபெறுவதாகவும் இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் புகையிரத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறான போதிலும் முன்கூட்டிய டிக்கட் பதிவு செய்தவர்களும், புகையிரத
பயணஞ் சீட்டிக்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொண்டவர்களும், வழமை போல் தங்களது
பயணங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருகோணமலை, முள்ளிப்பொத்தானை, தம்பலாகாமம், சீனக்குடா மற்றும் கந்தளாய் புகையிரத நிலையங்களின் புகையிரத நிலைய அதிபர்கள் பயணச்சீட்டு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் பணிபகிஷ்கரிப்பு செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தொடரூந்து திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த தொழிற்சங்க போராட்டம் இன்று( 24) முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் பொதிகள் பெறுவது வழங்குவது போன்ற சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, புகையிரத நிலைய அதிபரின் அலுவலகங்கள் மூடிக் காணப்பட்டதாகவும், புகையிரத நிலையங்கள் மக்கள் நடமாற்றமின்றி காணப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் புகையிரத நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.



