கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக இராதாகிருஷ்ணன் தெரிவு (Photos)
கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவரது பெயரை முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன அதனை வழிமொழிந்திருந்தனர்.
இரண்டு உப குழுக்கள் நியமனம்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக பணியாற்றியுள்ளதால் எனக்கு இத்துறை தொடர்பில் புரிதல் காணப்படுகின்றது.
அதனால் இந்தக் குழு ஊடாக மேற்கொள்ள முடியுமான உயர்ந்த சேவையை மேற்கொள்ள நான் எதிர்பார்த்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு பரந்துபட்ட ஒரு துறையைக் கொண்டுள்ளதால் உயர்கல்வி மற்றும் ஆய்வு பற்றிய உப குழு மற்றும் திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சி பற்றிய உப குழு ஆகிய இரண்டு உப குழுக்களை நியமிக்க இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன, குலசிங்கம் திலீபன், அசங்க நவரத்ன, முதிதா பிரசாந்தி சொய்சா, மாயாதுன்ன சிந்தக அமல், மஞ்சுளா திஸாநாயக்க மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்கவும் இதன்போது கலந்து கொண்டிருந்தார்.