புதிய சட்டமூலத்தால் பறிபோன மக்கள் உரிமை: கவலை வெளியிட்ட இரா. துரைரெத்தினம்
அநுர அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஊடாக மனிதர்களின் சுதந்திரம், கருத்து வெளியிடும் உரிமை மற்றும் இதுவரை காலமும் மக்கள் அனுபவித்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தும் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(16.02.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அடுக்குமுறை
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர்கள், உள்நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூர் சிவில் அமைப்புக்கள் அனைவரும் எதிர்த்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலம் மக்களை தண்டிக்கும் வகையிலும், அரசை பாதுகாக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தில், ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் எல்லைகள் அற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது ஊடக சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த புதிய சட்டமூலம் ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) விட மோசமானது.
தற்போது நாட்டிற்கு தேவையற்றது
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று முழுமையாக எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி இன்று அதை விட மோசமான சட்டத்தை கொண்டுவரப் போகிறது.

பாதுகாப்பு படைகளுக்கு கூடிய அதிகாரம், மக்களின் சுதந்திரமான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்குதல், முறையான விசாரணை செய்யாமல் நீண்ட காலம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்தல், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எழுத முடியாது, ஊடக துறையினை கட்டுப்படுத்துதல் போன்ற மக்கள் நலன் சார்ந்த பல ஜனநாயக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த சட்டமூலம் மிகவும் ஆபத்தானது, நாட்டுக்கு இது தற்போது உள்ள சூழ்நிலையில் தேவையற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.