பண்ணையாளர்களுக்கு விரைவில் தீர்வு: ஆளுநர் செந்தில் உறுதி (Video)
மட்டக்களப்பில் கடந்த இரண்டு வாரங்களாக பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்களுக்கு சரியான தீர்வை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக மகாவலி அமைச்சருடன் கலந்துரையாடியதாகவும் அவர் இது தொடர்பில் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடு, பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கோரி பண்ணையாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பண்ணையாளர்களுக்கு அச்சுறுத்தல்
பிரதேசத்தில் தொடர்ச்சியான முறையில் கால்நடைகள் பெரும்பான்மை சமூகத்தினரால் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்படுவதுடன், இறைச்சிக்காக வெட்டப்படுவதும் களவாடப்படுவதுமான நிலை காணப்படுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த போராட்டம் இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.