கிழக்கு மாகாணத்தில் இரு வாரங்களாக பால் பண்ணையாளர்கள் தொடர் போராட்டம் (Photos)
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட சிங்கள விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழ் பால் பண்ணையாளர்கள் பல ஆண்டுகளாக தங்கள் மாடுகளுக்கு உணவளிக்க பயன்படுத்திய நிலத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கோரி கிழக்கு மாகாணத்தில் பால் பண்ணையாளர்கள் இரண்டு வாரங்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நில அபகரிப்பின் பின்னணியில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், இனவாத மோதல்களை தூண்டி அமைதியின்மையை ஏற்படுத்துவதே காணிகளை அபகரிக்கும் சிங்கள மக்களின் நோக்கம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் பின்னணி
அத்துடன் நிலத்தை அபகரிக்கும் வேலையை இவர்கள் செய்கிறார்கள். எங்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பது இவர்களின் நோக்கம். அம்பாறை மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து இப்படி நடந்து கொள்கிறார்கள். அங்கே சகல வளங்களும் உண்டு. இங்கு வந்து இப்படி நடந்து கொள்கின்றனர்.
அவர்களின் நோக்கம் இனவாத மோதல்களை உருவாக்கி அமைதியின்மையை உருவாக்குவதுதான். இதற்கு பின்னால் அரசியல் பின்னணியும் உள்ளது.
செப்டெம்பர் 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குழுக் கூட்டத்தில், பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டச் செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததையடுத்து, தமிழ்ப் பால் பண்ணையாளர்கள் செப்டெம்பர் 15 முதல் மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
மாடுகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்திய சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர் நிலம் சிங்கள விவசாயிகளால் விவசாய நடவடிக்கைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு, மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அமைந்துள்ள புல் நிலம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சி காலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தினால், சோளம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் வகையில், குடியேற்றப்பட்ட 150 சிங்கள குடும்பங்களுக்கும் பிரதேச பால் பண்ணையாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்ட 6,000 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தில், சிங்கள விவசாயிகள் 2,500 ஏக்கர் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், இது புல் வளரக்கூடிய வளமான பூமியெனவும் பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனித்தம்பி நிமலன் வலியுறுத்துகின்றார்.
13 நாட்களாக தொடர் போராட்டம்
"992 பால் பண்ணையாளர்கள் உள்ளனர். அவர்களை நம்பி 3,000 குடும்பங்கள் உள்ளன. அவர்களின் பொருளாதாரம் இதை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் ஒரு நாளைக்கு 3,000 லீட்டர் பாலை வழங்குகிறார்கள்.
கறவை மாடுகளுக்கு குடி தண்ணீர் இல்லை. அரசிடம் தீர்வைக் கோரினோம். அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் உட்பட அனைத்துக் கூட்டங்களிலும், எங்களின் பிரச்சினைகளை முன்வைத்துள்ளோம். தீர்வைத் தருவதாகச் சொல்கிறார்கள் எனினும் எதுவும் நடக்கவில்லை.
பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாகாண ஆளுநரால் தீர்வுகளை வழங்க முடியாமல் போனது ஏன்” எனவும் சீனித்தம்பி நிமலன் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |