இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் பிரித்தானிய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகள்!
2009 ஆம் ஆண்டு இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் திரட்டப்பட்ட தரவுகளின் நம்பகத்தன்மை குறித்து பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி அரசியல்வாதியான நேஸ்பி பிரபு பிரித்தானிய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபுக்கள் சபையில் அவர் கேள்வியை எழுப்பியுள்ளார்.
2009, ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் நிலைமை தொடர்பாக பெறப்பட்ட சான்றுகளின் மற்றும் அறிக்கைகளின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் பயன்படுத்திய அளவுகோல்கள் குறித்து நேஸ்பி பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் நான்கு கேள்விகள் நேஸ்பி பிரபுவினால் பிரபுக்கள் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெயரிடப்படாத மூலங்களிலிருந்து அறிக்கைகளை ஏற்றுக்கொள்வது பிரித்தானிய அரசாங்கத்தின் நடைமுறையாக இருந்ததா? என்ற கேள்வியும் இதில் அடங்குகிறது.
அத்துடன் இந்த தகவல்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சுயாதீனமாக சரிபார்க்கப்பட்டதா? என்ற கேள்வியும் நேஸ்பி பிரபுவினால் கேட்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் கேணல் அன்டனி காஷ் பிப்ரவரி 2007 முதல் ஜூன் 2009 வரை கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பிரிட்டனின் பாதுகாப்பு இணைப்பாளராக இருந்தார்,
அவரே பிரிதானியாவுக்கு இரகசிய அறிக்கைகளை அனுப்பியதாக கூறப்படுகிறது என்ற தகவலையும் நேஸ்பி பிரபு தமது கேள்விகளுடன் இணைத்துள்ளார்.