மட்டக்களப்பு வாகரைப்பிரதேச செயலாளரது இடமாற்றம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி
வாகரைப்பிரதேசத்தில் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் பிரதேச செயலாளரை திடீரென இடம் மாற்றம் செய்து மாவட்ட செயலகத்திற்கு இணைப்புச் செய்ய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (24.07.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலஞ்சம் ஊழல் சார்ந்த விடயங்கள்
மேலும் தெரிவிக்கையில் “மட்டக்களப்பில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக மாத்திரம் செயற்படுகிறார்கள்.
இந்நிலையில் இவ்வாறு மிகவும் நேர்மையாக செயற்படும் பிரதேச செயலாளரை இராஜாங்க அமைச்சர்கள் தேர்தல் காலங்களில் அவர்களது இலஞ்சம் ஊழல் சார்ந்த விடயங்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி விடுவார்கள் என அஞ்சி இவ்வாறான நேர்மையான அதிகாரிகளை திட்டமிட்டு தமது அரசியல் தேவைக்காக பழிவாங்குகிறார்கள்.
இதனை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் உணர்ந்து இந்த பிரதேச செயலாளருக்கு இடம்பெறும் அநீதி தொடர்பாக மாவட்ட செயலாளர் மற்றும் ஜனாதிபதி மட்டம்வரை கொண்டு செல்ல வேண்டும்.
இல்லாவிடின் ஏனைய பிரதேச செயலாளர்களுக்கும் இவ்வாறான துர்ப்பாக்கியகரமான சூழல் இந்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களினாலும் ஏற்படலாம்.
தமிழ் பொது வேட்பாளர்
கிழக்கை மீட்போம், கிழக்கின் காவல் அரண் என கோசம் போட்டு திரியும் இராஜாங்க அமைச்சர்கள், புதிதாக தற்போது அம்பாறை மாவட்டதினை மையப்படுத்தியும் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள்.
இவ்விடயம்; தொடர்பில் தமிழ் அரசுக்கட்சி இன்னும் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்பது உண்மை. அதில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையும் போது அதுதான் தமிழ் மக்களின் பலமாக அமையும். அதில் இவ்வாறு இணைவதனால் தமிழ் மக்களின் ஒற்றுமை வெளிப்படும் என்பதே எனது நிலைப்பாடு.
சர்வதேசத்திற்கு நாம் ஒற்றுமையாக உள்ளோம், நமது தமிழர்களின் பலத்தை உலகிற்கு காட்ட வேண்டும், எனவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கரிசனை செலுத்துவது கட்டாயமாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |