வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான கேள்வி இரண்டு மடங்காக அதிகரிப்பு
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களுக்கான கேள்வி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், குடிவரவு குடியகழ்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினம் மொத்தமாக 2500 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், இது நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு எண்ணிக்கையிலும் 100 வீத அதிகரிப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 1200 கடவுச்சீட்டுக்களை மட்டும் விநியோகம் செய்த போதிலும், கடந்த இரண்டு வாரங்களாக நாள் ஒன்றுக்கு சுமார் 2500 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வரும் ஆயிரம் பேர் வரையில் நேரம் ஒன்றை வழங்கி திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவின்றி குவியும் மக்கள்
மக்கள் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வருவதனால் இவ்வாறான நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாது கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வர வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் காலை 6.15 மணிக்கு திருக்கப்பட்டு இரவு 10.00 மணி வரையில் சேவையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.