இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் மகாராணி எலிசபெத் எழுதிய கடிதம்! தொடரும் இரகசியம் (Video)
மகாராணி எலிசபெத் எழுதிய கடிதமொன்று இன்னும் திறக்கப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8ஆம் திகதி தனது 96ஆவது வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார்.
புதிய மன்னரானார் மூன்றாம் சார்லஸ்
இந்த நிலையில் புதிய மன்னராக 73 வயது நிரம்பிய மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுள்ளார்.
அத்துடன் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
ராணி எலிசபெத்தின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் உள்ள நிலையில் இன்று எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு கொண்டுவரப்படும்.
நாளை மறுநாள் லண்டன் கொண்டுவரப்படுவதுடன் அங்கு ராணியின் உடல் சில நாட்கள் இருக்கும். வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு எதிரே நடைபெறும் என தெரியவருகிறது.
இன்னும் திறக்கப்படாத கடிதம்
இவ்வாறான சூழ்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் நிலையில் அவரால் எழுதப்பட்ட கடிதமொன்று குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அவர் அவுஸ்திரேலியாவிற்கு சென்றபோது எழுதிய கடிதமொன்று அங்குள்ள ஒரு கட்டடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி விக்டோரியா கட்டடத்தில் குறித்த கடிதம் ரகசியமாக பூட்டி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த கடிதமானது கடந்த 1986ஆம் ஆண்டு நவம்பரில் ராணியால் எழுதப்பட்டதாக கூறப்படுவதுடன், அந்தக் கடித உறையில், 2085ஆம் ஆண்டில் இந்த கடித உறையைப் பிரித்து சிட்னி நகர மக்களுக்கு தான் எழுதியதை கூற வேண்டும் என எலிசபெத் வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சுமார் 16 முறை அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருப்பதாகவும், அங்குள்ள மக்களுடன் அவர் நெருங்கிய நட்பை பேணியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
Her Majesty The Queen’s coffin lies at rest in St Giles’ Cathedral, Edinburgh. pic.twitter.com/y7CpAgdIwy
— The Royal Family (@RoyalFamily) September 12, 2022