போரில் யாரும் வெற்றியாளர்கள் அல்ல – கட்டார்
போரில் யாரும் வெற்றியாளர்கள் கிடையாது என கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் காலக்கெடு முடிவடைய சில மணிநேரங்களே உள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இது குறித்து தோஹாவில் செய்தியாளர்களிடம் பேசிய கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மஜீத் அல்-அன்சாரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நிலைமை எப்போது வேண்டுமானாலும் கைமீறிப் போகலாம் என எச்சரித்துள்ளார்.

2023 முதல் தாங்கள் விடுத்து வரும் எச்சரிக்கைகளை சுட்டிக்காட்டிய அவர், தற்போது அந்த ஆபத்தான புள்ளியை நெருங்கிவிட்டதாக கவலையோடு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மின்சாரம், எரிசக்தி மற்றும் அணுசக்தி நிலையங்கள் போன்ற பொதுமக்களுக்கான உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போரைப் போலவே தற்போதைய மோதலிலும் அணுசக்தி நிலையங்கள் இலக்காக்கப்படுவது இப்பகுதி மக்களை சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்கும் என்று அல்-அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வரும் அதேவேளையில், ஈரானிய வெளியுறவு அமைச்சரிடமும் கட்டார் பிரதமர் இது குறித்துப் பேசியுள்ளார்.
எந்தத் தரப்பாக இருந்தாலும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளைத் தாக்குவதை ஏற்க முடியாது என்பதை கட்டார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஒருவேளை இத்தகைய தாக்குதல்கள் நிகழ்ந்தால், அது கட்டார் உள்ளிட்ட அண்டை நாடுகளின் உட்கட்டமைப்புகளையும் பாதிக்கும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்கு கட்டார் முழு ஆதரவு தெரிவிப்பதோடு, இப்போரில் எவரும் வெற்றியாளர்கள் இல்லை, அனைவரும் தோல்வியாளர்களே என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை விவகாரம் குறித்துப் பேசிய அவர், இது ஒரு இயற்கை நீர்வழிப் பாதை என்றும், இதை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்துப் பேசுவதற்கு முன்னதாகப் போரை நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
அதே சமயம், தனது நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது எந்தத் தரப்பிடமிருந்து அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளவும், நாட்டைப் பாதுகாக்கவும் கட்டார் முற்றிலும் தயாராக இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.