உக்ரைன் குறித்து பேசக் கூடாது! சர்வதேச நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் மீதான போர் குறித்து, சர்வதேச அமைப்புகளில் தேவையில்லாத விவாதங்கள் நடக்கின்றன. இதை வைத்து சர்வதேச அரசியல் விளையாட்டு நடத்துவதை எதிர்க்கிறோம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஜனாதிபதி ஷீ ஜின்பிங் ரஷ்யா சென்று,அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.
இதன்பின் அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆசியா -பசுபிக் பாதுகாப்பு முறை
மேலும் அந்த அறிக்கையில்,இந்தியாவில் நடந்த ஜி - 20 அமைப்பின் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்போது, இது தொடர்பாக விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்தோம். அதையடுத்து, இந்தப் பிரச்சினை குறித்து பேசப்படவில்லை.
அதுபோலவே,புதுடில்லியில் நடக்க உள்ள ஜி -20 மாநாட்டிலும், இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இந்தோ -பசிபிக் பாதுகாப்பு முறை என்ற பெயரில், இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு எதிரான முயற்சிகளில் சில நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதை விடுத்து,ஆசியா -பசுபிக் பாதுகாப்பு முறை குறித்து விவாதிக்க வேண்டும். இது,அனைவரையும் உள்ளடக்கியதாக, வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
