ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் போர் குற்றம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கைது செய்யப்பட்டால், அது உண்மையில் போர் பிரகடனமாக இருக்கும் என தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
இதேவேளை ஜோகன்னஸ்பர்க் நகரின் பல பகுதிகளில் ஜனாதிபதி ரமபோசாவே, புடினை கைது செய்யுங்கள் என வலியுறுத்தி பதாகைகள் நிறுவப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் நகரில் முன்னெடுக்கப்படும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் புடின் கலந்துகொள்வார் என்றே நம்பப்படுகிறது.
ஆனால் உக்ரைன் போர் குற்றம் தொடர்பில் அவரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் பிரகடனம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாடான தென்னாப்பிரிக்கா, விளாடிமிர் புடினை கைது செய்யும் பொருட்டு உதவ முன்வர வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தையும் நாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால், தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்படியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதை ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளிப்படையாக எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியை வெளிநாட்டு மண்ணில் கைது செய்வது என்பது போர் பிரகடனம் என ரஷ்யாவும் எச்சரித்துள்ளது.
விளாடிமிர் புடின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கால் பதித்தால், ஜனாதிபதி ரமபோசா அவரை கைது செய்ய வேண்டிய நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.
புடின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வருகை தருவார் என்றால், அது தென்னாப்பிரிக்கா இதுவரை எதிர்கொள்ளாத அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |