பொம்மை பிரதமர் ஒருவர் இருந்திருந்தால் அரசாங்கமும் ஜனாதிபதியும் அழிந்திருப்பார்கள்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
''பொம்மை பிரதமர் ஒருவர் இருந்திருந்தால் இன்றைக்கு இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் அழிந்திருப்பார்கள். இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று காலை நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த சூறாவளியை ஏன் உருவாக்கினார்கள்? மகிந்த சூறாவளியில் இன்று அவர்களால் பயணிக்க முடியாது. எல்லோரும் உங்கள் புகைப்படத்தைப் பயன்படுத்தித்தான் அரசியல் செய்தார்கள். நீங்கள் இல்லாமல் உங்கள் பெயரைப் பயன்படுத்தாமல் யாரும் கூட்டம் நடத்த முடியாது. அதுதான் கசப்பான உண்மை.
உங்களைக் காண்பித்தால் தான் அவர்களுக்கு அரசியலில் இருக்க முடியும் . உங்களால்தான் நாங்கள் இன்று இந்த மாவட்டத்தில் இருக்கிறோம். உங்களுடன் இருப்பதால் மக்கள் எங்களை மதிக்கிறார்கள். அதுதான் யதார்த்தம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நாங்கள் இருப்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுகிறோம்.
அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, உங்களைத் தவிர வேறு எதையும் யாராலும் செய்ய முடியாது. அப்போது கோட்டாபயவை சுகததாச விளையாட்டு அரங்குக்கு அழைத்து வந்து என் தம்பி என்று சொன்னீர்கள். குடும்ப உறுப்பினரைப் போல நினைத்து உதவி செய்யுமாறு கோரினீர்கள்.
மக்கள் அதை ஏற்றுக்கொண்டு அறுபத்தொன்பது லட்சம் வாக்குகளை அளித்தார்கள். உங்களுக்கும் அதிகமாக வாக்களித்தனர். உங்கள் ஒரு வார்த்தைக்கு மதிப்பளித்து இவ்வாறு வாக்களித்தார்கள். 2015க்குப் பிறகு நீங்கள் இல்லாத காலப்பகுதியில் என்ன நடந்தது என்பதை மக்கள் பார்த்தார்கள்.
இறுதியாக மக்கள் தமது நன்றிக்கடனைச் செலுத்தினார்கள். உங்களுக்கு எதிராக இருந்தவர்களும் உங்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். அதனால்தான் சக்திகளும், கிழக்கு சக்திகளும், சர்வதேச சக்திகளும் பிரேமதாசாவை ஆதரித்த போதும் கோட்டாபய வெற்றி பெற்றார்.
இன்று நமக்கு பல சவால்கள் உள்ளன. 2015க்கு பிறகு நீங்கள் ஜனாதிபதியாக இருந்திருந்தால், கோவிட் அல்ல, எந்த நெருக்கடியானாலும் நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்காது. நீங்கள் உருவாக்கிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. நீங்கள் உருவாக்கிய தேசிய பாதுகாப்பு அழிக்கப்பட்டது. அதனால்தான் டொலர் நெருக்கடி ஏற்பட்டது.
சஹரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகுதான் வெளிநாட்டினர் இந்த நாட்டிற்கு வருவது தடைப்பட்டது. டொலர் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. நீங்கள் உருவாக்கிய பொருளாதாரத்தை நாசமாக்கி கடைசியாக ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு கடைசி இடத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. இதுதான் யதார்த்தம். உலகம் முழுவதும் கோவிட் கொள்ளை நோய் தாக்கியது.
அதை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகிந்த ராஜபக்ச ஒரு முதிர்ந்த தலைவர் என்று நாங்கள் அப்போது கூறினோம். அதைத்தான் இந்த நாட்டு மக்கள் விரும்புகின்றனர். இன்னொரு பிரதமர் இருந்திருந்தால் இன்று என்ன நடக்கும்? உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் இருக்கையில் இன்னொரு பிரதமர் இருந்தால் என்ன நடந்திருக்கும்.
உங்களால் தான் ஜனாதிபதியும் அரசாங்கமும் தப்பித்துள்ளனர். பொம்மை பிரதமர் ஒருவர் இருந்திருந்தால் இன்றைக்கு இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் அழிந்திருப்பார்கள். இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, ஜனாதிபதி கோட்டாபய இந்த கோவிட் தொற்றுநோயை மிகவும் சாதுரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டார்.
இந்த கூட்டணி தான் இன்று யுத்தத்தை வெல்லவும் உதவியது. எனவே, அந்த கூட்டணி இன்றும் எந்த பிரச்சினையும் இல்லாமல், மிகவும் சுதந்திரமாக வேலை செய்ய உங்களுக்கு எல்லா அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது . சவால் விடும் பிரதமர் ஒருவர் இருந்திருந்தால் இன்று பல பிரச்சனைகள் வந்திருக்கும். 20ஐ கொண்டு வந்து அரசியலமைப்பைத் திருத்தினோம்.
சிலருக்குப் பிடிக்கவில்லை. சிறிசேனாவும் ரணிலும் கொண்டு வந்ததில் நல்ல பகுதிகள் இருப்பதாகச் சிலர் நினைத்தனர். அது பல பிரச்சினைகளை உருவாக்கியது. ஆனால் இந்த சவால்கள் அனைத்தையும் நாங்கள் எதிர்கொண்டோம். இன்று நமக்கு சவால்கள் உள்ளன. எண்ணெய் பிரச்சினை வந்தது. எரிவாயு பிரச்சினை வந்தது. இன்று நாட்டில் இந்த பிரச்சினைகள் உள்ளன.
எங்களிடம் எண்ணெய் இல்லை என்று அரசாங்கமே சொன்னால், நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? எண்ணெய்க்குக் காசு கொடுப்பதில்லை என்கிறார்கள். ஆப்பிள், திராட்சை கொண்டு வருவதற்கு மட்டும் காசு கொடுக்கப்படுகிறது என்று யாராவது சொன்னால் அரசாங்கத்தைப் பற்றி நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? மக்கள் குழப்பம் அடைவார்கள்.
மக்கள் அப்பாவிகள். அமைச்சரவையில் உள்ளவர்கள் எண்ணெய் தீர்ந்து விட்டது என்கிறார்கள். மக்கள் எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் நிற்க ஆரம்பித்தார்கள். வானங்கள் வரிசையில் நின்றன. அதனால் என்ன நடந்தது? மக்கள் கலக்கமடைந்தனர். யார் இந்த குழப்பத்தை உருவாக்க நினைத்தார்கள்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகே குழப்பம் விளைவிப்பவர்கள் யார் என்று காணொளி எடுத்துப் பார்த்தால் அங்கே யார் இருக்கிறார்கள் என்று புரியும். நால்வரும் மீட்டரைப் பார்க்கிறார்கள். கூட்டத்தைப் பார்த்து ஊடகங்களிடம் பேசி அவர்களை வரச் சொல்லுங்கள் என்கிறார்கள்.
இவர்கள் என்ன செய்ய முயற்சி செய்கிறார்கள். எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, இராஜாங்க அமைச்சராக இருந்தாலும் சரி, அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் எதிர்க்கட்சியிலிருந்து செய்தவற்றைத் தான் ஆளும் தரப்பிற்கு வந்தபிறகும் செய்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ யாராவது ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாக இருந்தால் அதனால் பேரிழப்பு ஏற்படும்.
எனவே, விருப்பம் இல்லாத நிலையிலும் எமது அமைச்சர்கள் இருவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானங்களை எமது ஜனாதிபதி எடுக்க வேண்டியிருந்தது. இப்போது நிதியமைச்சரைத் தாக்குகிறார்கள். கொடுத்தாலும் ஜனாதிபதியிடம் இருந்து பெறமாட்டோம் என்கிறார்கள்.
எனவே இதைப் பார்க்கும் போது எதிர்க்கட்சியின் பணியை அரசாங்கத்திற்குள் இருந்து செய்வதாகத் தோன்றுகிறது. எனவே, மகிந்த ராஜபக்சவின் கொள்கையையே எமது ஜனாதிபதியும் பின்பற்றுகின்றார். சலூன் கதவு திறந்தே உள்ளது. நீங்கள் வரலாம் ,போகலாம். இன்று நிதி அமைச்சரிடமும் பேசினேன். தேவையான எண்ணெய்யை ஏற்கனவே இறக்குமதி செய்துள்ளோம்.
நம் நாட்டில் இப்போது எண்ணெய் பிரச்சினை கிடையாது. நாளை விடுமுறை என்றாலும் எண்ணெய் விநியோகம் வழக்கம் போல் நடைபெறும். மக்கள் பீதியடைய வேண்டாம் என்று நான் பொறுப்புடன் சொல்கிறேன். மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் நமக்கு தேவையான எண்ணெய் கையிருப்பில் உள்ளது.
மீண்டும் ஒருமுறை இந்த நாட்டு மக்கள் எண்ணெய்யால் பிரச்சினைகளைச் சந்திக்க
இடமளிக்க மாட்டோம். இது மக்களின் நம்பிக்கையைக் கெடுக்காது. நம்பிக்கையைச்
சீர்குலைத்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் எண்ணெய் விநியோகம் செய்வோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 29 நிமிடங்கள் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri