ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பூண்டுலோயா டன்சினன் பகுதி மக்கள்!
பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் அசாதாரண வகையில் தங்களைத் தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவித்து இன்று(06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் தங்களைத் தோட்டத்திற்குள் தனிமைப்படுத்தி வைத்திருக்கின்ற காரணத்தினால் பாரிய அசௌகரியங்களுக்கும், பல்வேறு கஷ்டங்களுக்கும் தாங்கள் ஆளாகியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காரணத்தினால் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கின்ற பொருட்கள் உதவிகள்கூட தங்களுக்கு இதுவரைக் கிடைக்கவில்லை எனவும், வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காகவும் குறித்த பிரதேசத்திலிருந்து வெளியே செல்லவும் முடியாத நிலைமைக்கு மத்தியில், பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அநீதியான முறையில் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் வெளியிடங்களுக்குச் சென்று அன்றாடம் கூலி வேலை செய்தவர்களுக்கும் வருமானம் இழப்பு எனப் பல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 500 தொழிலாளர்கள் இவ்வாறு இன்று பல்வேறு பதாதைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களைத் தனிமைப்படுத்தலிலிருந்து விரைவில் விடுவிக்கும்படியும் சுகாதாரப்பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைத்து இறுதியில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இதனையடுத்து, இப்பகுதி இன்று முதல் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




