பசில் ராஜபக்சவிற்கு சர்வதேச பிடியாணை - CIDயினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தில் நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சர்வதேச பிடியாணை பெற வேண்டுமாயின் சத்தியக்கடதாசியை தாக்கல் செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கோட்டை நீதவான் பசான் அமரசேன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை நேற்று (10) மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் அறிக்கை தாக்கல்
2014 ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, விளம்பர நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சியின் உருவம் மற்றும் அரசியல் கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 12,000 ரி-ஷர்ட்டுகள் (T-shirts) அச்சிட, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் (SLTPB) ரூ. 7.8 மில்லியன் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆரம்பத்திலேயே இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அறிவித்தல் விடுக்க வேண்டிய அவசியமில்லை என நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவையெனின் நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்து சர்வதேச பிடியாணை பிறப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் அறிவித்துள்ளார்.
சர்வதேச பிடியாணை உத்தரவு
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் என்பவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டாவது சந்தேகநபரான பணியகத்தின் முன்னாள் தலைவர் பஸ்வர் குணவர்தனவை 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri