அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படும் புல்மோட்டை வீதி
புல்மோட்டை நோக்கிய பயணத்திற்கான வீதியொன்றில் பயணிக்கும் பயணிகள் பாரிய போக்குவரத்துச் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.
அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பகுதிகளில் புல்மோட்டை வீதியின் துயரமும் ஒன்றாகித் தொடர்வதாக அந்த பாதையினை பயன்படுத்தி வரும் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
புல்மோட்டை வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிக்கும் போது தென்னமரவடிக்கு திரும்பும் சந்தியில் இருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் திசையில் திரும்பி 3 கிலோமீற்றர் தூரம் கிரவல் பாதைவழியே பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் முல்லைத்தீவில் இருந்து பயணிக்கும் பயணிகள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
வீதியபிவிருத்தித் திணைக்களம் இது தொடர்பில் காட்டிவரும் அக்கறையற்ற போக்கு மக்களுக்காக என உள்ள அரசாங்கத்தின் மீது கோபம் எழுவதாக ஜனகபுரம், சப்பத்நுவர பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டு புல்மோட்டை நோக்கி பயணிக்கும் வியாபாரி குறிப்பிட்டார்.
கிரவல் பாதையினால் துயரம்
பாதையின் முழு நீளத்திற்கும் பயணிக்க முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக நிரம்பிப் பரவிக் காணப்படுகின்றது.
கிரவல் போடப்பட்டு இருந்த இந்த வீதி தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் பாதையூனூடான போக்குவரத்தினால் பாரியளவிலான சேதத்திற்குள்ளாகி இருக்கின்றது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரிருந்து இன்றுவரை கிரவல் வீதியாக இப்பாதை இருப்பதாக இப்பாதையின் பக்கங்களில் நெற் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
சிங்கள மக்கள் வாழும் கிராமத்திற் கூடாக செல்லும் இந்தப் பாதையினை அதிகளவில் பயன்படுத்தும் மக்களில் தமிழர்களே அதிகம் இருப்பதாக திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவினூடாக தினமும் பயணித்து வரும் வியாபாரியொருவர் தன்னுடைய அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.
முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக அமையும் பாதையின் ஒரு பகுதியாக இது இருக்கின்றது.
பல வருடங்களாக திருத்தியமைக்காது இருக்கும் இந்த பாதை ஏன் இதுவரை கவனத்திற்கெடுக்கப்படாது இருக்கின்றது என்ற வினாவுக்கு துறைசார் அதிகாரிகளுக்கிடையே பொறுப்பு வாய்ந்த பதில்களை பெறமுடியவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
ஜனகபுரம் மேற்குச்சந்தி பிள்ளையார்
முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதி முழு நீளத்திற்கும் காபைற் இடப்பட்டுள்ளது. முல்லைதீவு - கொக்கிளாய் வீதியில் இருந்து மணலாறு செல்லும் வீதியும் காபைற் வீதியாக இருக்கின்றது.
மணலாற்றுப் பாதையில் இருந்து ஜனகபுரம் மேற்குச்சந்தி பிள்ளையார் கோவில் சந்தியில் இருந்து திரும்பி புல்மோட்டைக்கு பயணிக்கும் போது சிறிது தூரம் பயணித்ததும் கிரவல் பாதை ஆரம்பமாகின்றது.
தென்னமரவடிச் சந்தியில் இருந்து 3 கிலோமீற்றர் முல்லைத்தீவு பாதையில் கிரவல் பாதை உள்ளது. இது பயணிக்க முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளது என்றால் இலகுவாக புரிந்துகொள்ள முடியும் என திருகோணமலை முல்லைத்தீவு பேருந்து நடத்துனர் ஒருவர் குறிப்பிட்டார்.
பேருந்து பயணத்தின் போது பயணிகள் பெருமளவுக்கு அசௌகரியங்களை சுமப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாழைப்பழ வியாபாரிகள், பேருந்துப் பயணிகள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள்,உந்துருளி பயணிகள் என பலரும் பயன்படுத்தி வரும் இந்த வீதியை விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்றது
ஈழநிலம் என குறிப்பாக உணர்த்தும் வடக்கையும் கிழக்கையும் இணைத்துக் கொள்ளும் குறுகிய தூர பயணப்பாதையாக இது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைக்கப்படாது இருக்கும் பாலத்தினால் நீண்ட தூரம் பயணித்து (சுமார் 25 கிலோமீற்றரிலும் கூடிய தூரம்) புல்மோட்டையை அடையும் நிலையில் பயணப்படும் மக்கள் தங்களின் பயணப் பாதையில் நீண்ட நாட்களாக திருத்தப்படாது இருக்கும் கிரவல் பாதையினை திருத்தித் தரக்கோரிய போதும் உருப்படியான மாற்றங்கள் இல்லை என கொக்குத்தொடுவாயில் இருந்து தொன்னமரவடிக்கு உறவினர் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று வரும் முதியவர் தான் பட்டு வரும் துயரினைக் குறிப்பிட்டார்.
பாராமுகமாக இருக்கும் இந்த இப்படியான பாதைகளை திருத்தி மக்களின் பயணங்களை இலகு படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளும் கவனமெடுக்காது கடந்து போவதனை எப்படி எடுத்துரைப்பது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாற்றங்கள் வருமா
மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சுமக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் காட்டிவரும் அக்கறை தொடர்பில் அதிருப்தியினை சமூக வியட ஆய்வாளர்கள் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
தேர்தல் கால பரப்புரைச் செலவுகளில் கொஞ்சத்தினை இப்படியான சவால்களை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்தினால் பயனடையும் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்களா என்ன என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மக்களை சவால்களோடு வாழ வைத்து அரசியல் செய்யும் போக்கு நிலவுகின்றதா?என்ற கேள்வியை எழுப்ப தோன்றுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
விரைவில் இந்த கிரவல் பாதை பயணத்திற்கு ஏற்றவகையில் திருத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |