வடிகாலுக்குள் கிடந்த கழிவுப்பொருட்கள்: மக்களின் பொறுப்பற்ற செயல் தொடர்பில் விசனம்(Photos)
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் வீதியோர வடிகால் பகுதிகளில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குப்பைகள் அதிகம் சேர்ந்துள்ளன.
மழைக்காலத்தில் வழிந்தோடும் வெள்ள நீர் இதனால் தடைப்பட்டு வெள்ளனர்த்தம் ஏற்படுவதற்கு இவை காரணமாகி விடுகின்றன.
புதுக்குடியிருப்பு நகரின் வர்த்தக நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகி விடுகின்றமையும் நோக்கத்தக்கது.
சுத்திகரிப்பு செயற்பாடில் திணைக்களத்தினர்
வீதிகளில் வெள்ளம் தேங்கும் இடங்களை கண்காணித்து மணல் தேங்கிய இடங்களில் அவற்றை அகற்றி நீர் வடிந்தோடுவதை உறுதி செய்யும் செயற்பாட்டில் வீதியபிவிருத்தி திணைக்களத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 28.11.2023 அன்று புதுக்குடியிருப்பு சந்தியில் பரந்தன் வீதியில் தீபன் இலத்திரனியல் விற்பனை நிலையத்திற்கு முன்னுள்ள வீதியோர வடிகால் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அதிகளவான குப்பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் வடிகால்களில் தேங்கி இருப்பதனை அவதானித்து அவற்றை அகற்றுவதில் ஈடுப்பட்டதாக அப்பணிகளை ஒருங்கிணைத்து செயற்படுத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
வர்த்தக நிலையங்களினால் அகற்றப்படும் அதிகளவான கழிவுகளை அவற்றுள் அவதானிக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“வடிகால்களில் சேரும் கழிவுகளால் வாய்க்கால் வழி வடிந்தோடும் மழைக்கால நீர் தடைப்பட்டு வெள்ளம் ஏற்பட காரணமாகிவிடும்.
நீர் வடிகால்களை விட்டு மேலேறி வீதியில் பாய்ந்தோடி இடர்களை தோற்றுவித்து விடும். பொறுப்பற்ற முறையில் கழிவுகளை வீசுவதாலும் கழிவுகளை உரிய முறைப்படி அகற்றாதிருப்பதாலும் இத்தகைய சூழல் ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடிகால்கள் மீது இடப்படும் கொங்கிறீற் தகடுகளோடு இணைத்து இடப்பட்ட வர்த்தக நிலையத்தின் முற்றத்திற்கு இடப்பட்ட சீமெந்து தரையினால் சுத்திகரிப்பு பணியாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வடிகால்களை சுத்தம் செய்வதற்காக சீமெந்து மூடிகளை அகற்ற முடியாத நிலையால் கம்பிகளை பயன்படுத்தியே குப்பைகளை அகற்ற வேண்டியதாயிற்று என அவர் மேலும் தெரிவித்தமை நோக்கத்தக்கது.
பலமுறை அறிவுறுத்தப்பட்டது
வீதியின் வடிகால்கள் பல இடங்களில் திறந்து இருக்கும்.அதனுள் கழிவுகளை கொட்டுவதனால் அவை நீர் ஓட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றாகி விடுகின்றது.
வர்த்தக நிலையங்களிற்கு வடிகால்களினுள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என பலமுறை எடுத்துரைத்த போதும் அவர்கள் கேட்டபாடில்லை என சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.
பொதுமக்களும் தாங்கள் பயன்படுத்தி விட்டு வீசும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பைகளை வீதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை கொட்டும் இடங்களிலுள் இடுதலே சுத்தமான நகரமாக புதுக்குடியிருப்பு நகரத்தை பராமரிக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் இயன்றளவு குப்பைகளை உரிய முறையில் அகற்றி வருவதாகவும் குப்பைகளை சேகரித்து பிரதேச சபையின் குப்பை அகற்றும் வாகனங்களில் சேர்ப்பிப்பதாகவும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் சார்பில் கருத்துரைத்தவர் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
வீதியின் வடிகால்களினுள் இந்தளவு குப்பைகள் சேர்வது தமக்கு கவலையளிப்பதாகவும் முடிந்தளவில் வடிகால்களை சுத்தமாக பேண முயல வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சூழலுக்கு வீசப்படும் கழிவுகள்
புதுக்குடியிருப்பு நகரின் பல இடங்களில் திறந்து சூழலுக்கு வீசப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகளால் இத்தகைய அசௌகரியம் ஏற்படுவதாக பிரதேச சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் இது தொடர்பில் விளக்குகின்றார்.
“திறந்த வெளியில் வீசப்படும் பொருட்கள் காற்றாலும் நீராலும் அடித்துச் செல்லப்படும் போது பள்ளங்களினுள் அவை போய் சேர்ந்து விடுகின்றது.
அப்படியான ஒரு பள்ளமாக திறந்த வடிகால்கள் இருந்து விடுவதினால் அங்கு அவை அதிகமாக சேர்கின்றன.
அண்மையில் பொழிந்த மழையின் போது வெள்ளத்தினூடாக அதிகமான கழிவுகள் வடிகால்களினுள் சேர்வதற்கும் திறந்த வெளியினுள் வீசப்படுதலே பிரதான காரணமாக அமைந்திருந்தது.
இந்த நிலை வடிகால்களினுள் மட்டுமல்லாது வெள்ள நீர் பாயும் பல இடங்களிலும் வெள்ளத்தால் கொண்டுவரப்பட்டு விடப்பட்ட கழிவுகளை அவதானிக்க முடிகின்றது.
பொதுமக்கள் விழிப்படைந்து தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட இலகுவில் உக்கலடையாத பொருட்களை சூழலுக்கு வீசுவதனால் பாரியளவிலான சூழல் மாசு எதிர்காலத்தில் ஏற்படும்.
இது சரியான முறையில் அவதானிக்கப்பட்டு ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படுதல் ஆரோக்கியமான மனித வாழ்வுக்கு உதவும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்வில்லாது தொடரும் பெரும் நெருக்கடி
வடமாகாணத்தில் பல இடங்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பைகள் வீதிகளில் வீசப்படுவதும் நீர் நிலைகளில் வீசப்பட்டு இருப்பதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
பல இடங்களில் உள்ள நிலைமைகளை ஊடகங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட போதும் உரிய அரச அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வுகளை முன்னெடுத்த போதும் இத்தகைய கழிவுகள் சூழலுக்கு வீசப்படுவது தவிர்க்கப்படாது தொடர்ந்தவாறே இருக்கின்றது.
கழிவு முகாமைத்துவம் மற்றும் பழக்கப்படுத்தல் தொடர்பில் பாடசாலை மாணவரிடையே ஏற்படுத்தப்படும் பழக்கம் மட்டுமே நாளைய நாட்டில் ஒரளவுக்கேனும் தீர்வுகளை தரக்கூடிய முயற்சியாக அமையும் என சூழலியல் ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















