அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கடத்தப்பட்ட இருவர்.. கோட்டாபயவின் புதிய யுக்தி
லலித் மற்றும் குகன் இருவரும் காணாமல் போன வழக்கில், கேள்விகள் கேட்கவில்லை என்றோ சம்பவங்கள் நினைவில்லை என்றோ கூறி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் (FSP) கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கோட்டாபய சாட்சியமளித்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஜயகொட, முந்தைய விசாரணையின் போது கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, "எனக்குக் கேட்கவில்லை" அல்லது "எனக்கு நினைவில்லை" எனத் தொடர்ந்து கூறி வந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "அந்த விதத்தில் அவர் இந்த விடயத்திலிருந்து தப்பிக்க முடியாது, 2010 டிசம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து லலித் குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
கெஹலியவின் வாக்குமூலம்
அவர்கள் எங்குள்ளனர் என்பது குறித்த எவ்விதத் தகவலுமின்றி 16 வருடங்கள் கடந்து விட்டன.

அவர்கள் காணாமல் போன சிறிது காலத்திலேயே, அவ்விருவரும் கடத்தப்படவில்லை மாறாகக் கைது செய்யப்பட்டதாக அன்றைய அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார்.
அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகப் பின்னர் ரம்புக்வெல்ல நீதிமன்றில் தெரிவித்தார்.

குமார் குணரத்னத்தின் கடத்தல் தமது அறிவுக்கு உட்பட்டே இடம்பெற்றதாக 2015ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.
அப்படியானால், லலித் மற்றும் குகனின் கடத்தல் குறித்து அவருக்குத் தெரியாமல் இருக்க எவ்விதக் காரணமும் இல்லை.
முன்னிலை சோசலிசக் கட்சியின் இந்தப் போராட்டம் பழிவாங்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல, மாறாக இதுபோன்ற காணாமல் போதல்களுக்குப் பொறுப்பானவர்கள் இறுதியில் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதே நோக்கம்” என தெரிவித்தார்.