அரச ஊழியர்களின் வெள்ளிக்கிழமை விடுமுறைக்கான சுற்றறிக்கை வெளியீடு
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமை விடுமுறை வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்,மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயதுன்னே இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அத்தியவசிய சேவை நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை பொருந்தாது
நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உட்பட அத்தியவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது.
அத்துடன் வெள்ளிக் கிழமைகளில் நிறுவனத்தை திறந்து வைக்க வேண்டும் என ஏதாவது ஒரு அமைச்சின் செயலாளர் முடிவு செய்தால், அந்த நிறுவனத்திற்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுத் தோட்டங்கள்
எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு தீர்வாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளளதுடன் விடுமுறை பெறும் அரச ஊழியர்களை வீட்டுத் தோட்ட பயிர் செய்கையில் ஈடுபடுத்துவதற்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.