PHI மோசடி குறித்து பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) போல் ஆள்மாறாட்டம் செய்து, வீடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மோசடியாக பணம் பெறும் நபர்கள் குறித்து இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த மோசடிக்காரர்கள், டெங்கு பரிசோதனை நடவடிக்கைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சட்ட நடைமுறைகள் தொடர்பானது என்று கூறி பணம் கோருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார்.
பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
இவ்வாறான சம்பவங்கள் குறித்து அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் என ஆள்மாறாட்டம் செய்பவர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில் அவர்கள் எந்தவொரு உத்தியோகபூர்வப் பணிகளுக்காகவும் எந்த சூழ்நிலையிலும் பணம் வசூலிப்பதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொது சுகாதார ஆய்வாளர் எனக்கூறிக்கொள்ளும் எவரேனும் தமது கடமைகள் தொடர்பாகப் பணம் கோரினால், பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.