ரணிலுடனான சந்திப்பின் பின் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் பிளவு: மின்சார கட்டண உயர்வு நடைமுறை
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின், சுயாதீன ஆணைக்குழுவின் சுதந்திரத்தை பாதுகாக்க சட்ட நடவடிக்கையை நாடவுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (20.01.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டண உயர்வை எதிர்ப்பதற்கு ஆரம்பத்தில் தமது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துதல்
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பைத் தொடர்ந்து அதில்
மூன்று உறுப்பினர்கள் ஆணைக்குழுவின் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானத்திலிருந்து பின்வாங்கி மின்சார கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான
அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்கியுள்ளனர்.
ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பிலேயே இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம்
இதேவேளை இலங்கை மின்சார சபையும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் என நேற்று (20.01.2023) கூடிய தேசிய சபை வலியுறுத்தியுள்ளது.
இதன்படி ஜனவரி 24 ஆம் திகதி மீண்டும் தேசிய சபையால் இலங்கை மின்சாரசபையும்,
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அழைக்கப்பட்டுள்ளன.