பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மின்சார விபத்துகள், மின்சாரம் தாக்குதல் போன்ற அபாயங்கள் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வீடுகளில் மின்சாரத்தை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துவதன் காரணமாக கணிசமான அளவில் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக தெரிவித்துள்ளது.

தரமற்ற அல்லது பழுதடைந்த அலங்கார மின்விளக்குகள் மற்றும் மின்சாதனங்களே இதற்கான முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களாக கருதப்படும் வீடுகளில்கூட, மின்சார பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், மறைந்திருக்கும் ஆபத்துகள் பெரும் விபத்துகளாக மாறக்கூடும் என ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
அலங்கார மின்விளக்குகளை வாங்கும் போது, இலங்கை தரநிர்ணய சபையினால் சான்றளிக்கப்பட்ட 13A Type-G சதுர முள் (square pin) பிளக் கொண்டவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயன்படுத்துவதற்கு முன் வெளிப்படையாக காணப்படும் வயர்கள், தளர்ந்த இணைப்புகள், சேதமடைந்த இன்சுலேஷன் அல்லது அதிக வெப்பம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை கவனமாக பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர் அனுமதித்த வகை விளக்குகள் அல்லது LED விளக்குகளை மட்டுமே மாற்றி பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிளக், எக்ஸ்டென்ஷன் கம்பிகள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை ஈரப்பதத்திலிருந்து பாதுகாத்து, உள்புறத்தில், உலர்ந்த இடங்களில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள் மற்றும் வெளிப்புற அலங்கார விளக்குகளுக்கு 30 mA RCCB (Residual Current Circuit Breaker) கொண்ட மின்சார வழங்கல் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளியில் பயன்படுத்தப்படும் அலங்கார விளக்குகள் மழையை எதிர்கொள்ளக் கூடிய வகையில், வெளிப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக சான்றளிக்கப்பட்டவை ஆக வேண்டும். திரைகள், காகித அலங்காரங்கள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் அலங்கார விளக்குகளை பொருத்த வேண்டாம் என்றும், உற்பத்தியாளர் அனுமதி இல்லாமல் பல அலங்கார விளக்குத் தொகுதிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மின்சாரம் இணைக்கப்பட்ட நிலையில் விளக்குகளை பொருத்துவதோ அல்லது அகற்றுவதோ கூடாது என்றும், சேதமடைந்த அலங்கார விளக்குகளை பழுது பார்க்க முயற்சிக்காமல் பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரமற்ற அல்லது பழுதடைந்த அலங்கார மின்விளக்குகள் காரணமாக ஏற்படும் மின்சாரம் தாக்குதல் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.
எனவே, அனைவரும் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan