பொது இடத்தை பறிக்க வேண்டாம்! கொட்டகலை - ரொப்கில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
கொட்டகலை - ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (06.09.2026) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரொப்கில் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொதுத் தேவைக்காக பயன்படுத்தப்படும் இடம்
ரொப்கில் தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில், குறித்த இடம் கடந்த பல வருடங்களாக தங்களின் பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

குறிப்பாக, அப்பகுதியில் அமைந்துள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் விசேட நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்த இடத்தில் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், சீரற்ற காலநிலையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும் குறித்த இடத்திலிருந்தே முன்னெடுத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
இந்நிலையில், தாங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் இந்த பொது இடத்தை தோட்ட நிர்வாகம் தனியாருக்கு வழங்கி, அங்கு மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri