உணவு பொருட்களின் விலை குறைப்பு! அரசாங்கத்தை பாராட்டிய பொதுமக்கள்(Video)
கடந்த சில தினங்களாக அரசாங்கம் உணவு பொருட்களின் விலைகளை குறைத்து வருவது பாராட்டுக்குரிய விடயம் என மலையக பகுதியில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,நாங்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம்.
இந்நிலையில் அரசாங்கம் நாங்கள் பயன்படுத்தும் கோதுமை மா, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையையும் எரிவாயு விலையையும் குறைத்துள்ளது. இதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
எனினும் விலை குறைக்கப்பட்ட எந்த பொருட்களும் ஹட்டன், கொட்டகலை, பொகவந்தலாவை உள்ளிட்ட மலையகத்தின் பிரதான நகரங்களில் குறைக்கப்படவில்லை. இதனை பெற்றுக்கொள்வதற்கு சதொச விற்பனை நிலையத்திற்கே செல்ல வேண்டும்.
சதொச விற்பனை நிலையங்கள் பிரதான நகரங்களை தவிர்ந்த ஏனைய பகுதியில் இல்லை. எனவே இந்த விலைக்குறைப்பை அனுபவிக்க கூடிய நிலையில் மலையக மக்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வர்த்தகர்களின் நியாயமற்ற செயல்
இதேவேளை பல வர்த்தகர்கள் குறைந்த விலையில் உணவு பொருட்களை பெற்றுக்கொண்டபோதிலும் அதற்கமைய கொத்து ரொட்டி, பான் , பனிஸ் போன்ற மாவினால் செய்யப்படும் எந்த உணவு பொருட்களும் குறைவடையவில்லை.
இதனை கண்காணிப்பதற்கு அரச அதிகாரிகள் காணப்பட்ட போதிலும் எவ்வித பயனுமில்லை.
உணவு பொருட்கள் அதிகரிக்கும் போது அடுத்த கணமே அதிகரிக்கும் வர்த்தகர்கள் குறையும் போது அதனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்காதிருப்பது கவலையளிக்கின்றது.
ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளும்
எரிபொருட்களின் விகிதத்திற்கமைய குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.