மட்டக்களப்பு - சித்தாண்டியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிப்பு
மட்டக்களப்பு - சித்தாண்டி கிராமத்தில் டெங்கு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள கிராமங்கள் வெள்ளதில் மூழ்கியிருந்தன.
இந்நிலையில் சித்தாண்டி - 2, சித்தாண்டி - 3, சித்தாண்டி - 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு நுளம்பின் தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவிக்கின்றார்.
டெங்கு நோய் தாக்கம்
குறித்த பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் நோயாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் இதுவரை 64 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சிலர் வெளியேறிய நிலையில் இன்னும் பலர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு நேற்று (04.02.2026) பொது சுகாதர பரிசோதகர்களால் விசேட கள ஆய்வு நடவடிக்கைகள் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றன.
இதன்போது சித்தாண்டி பகுதியிலுள்ள அனைத்து பிரிவுகளிலும் உள்ள வீடுகளில் டெங்கு தொடர்பான இடங்கள் கண்டறியப்பட்டதுடன், அதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
இந்த சந்தர்ப்பத்தில் 794 வீடுகள் டெங்கு தொடர்பில் ஆராயப்பட்டு 113 வீடுகளில் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டதுடன், டெங்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதுவரை சுமார் 50 இற்கு மேற்பட்டோருக்கு வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.



