நொச்சிமுனை கிராம சேவையாளரை உடன் இடமாற்றுமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை கிழக்கு கிராம உத்தியோகத்தராக கடந்த 3 வருடங்களாகக் கடமையாற்றி வரும் கிராம உத்தியோகத்தரை உடன் இடமாற்றம் செய்யுமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் ஒன்றினை இன்று வியாழக்கிழமை (18) கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கிராம உத்தியோகத்தர் காரியாலயத்துக்கு முன்னாள் ஒன்றிணைந்த மக்கள் பொதுமக்களை அவமதிக்கும் அதிகாரி வேண்டாம் , அரச காணியைப் பணத்திற்கு விற்கும் கிராம உத்தியோகத்தர் வேண்டாம், பொதுமக்களுக்குச் சேவை செய்யாத அதிகாரி எமக்குத் தேவையில்லை, அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் ஆனால் இவருக்கு மட்டும் இடமாற்றம் இல்லையாம், பெண்களை மதிக்காத கிராம சேவகர் எமக்கு வேண்டாம், போன்ற போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ .சுதர்சன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்குமாறு பிரதேச செயலாளரிடம் கையளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்துகலைந்து சென்றனர்.
இதேவேளை குறித்த கிராம உத்தியோகத்தருக்கு எதிராகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாகக் குறித்த கிராம சேவையாளரிடம் கேட்டபோது, இது தொடர்பான எந்த வித காணொளிப் பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டம் தொடர்பான எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






