யானை அச்சுறுத்தலை தடுக்கக் கோரி கந்தளாய் பகுதியில் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை - கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் கிராமத்தை சுற்றி மின் வேலி அமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது, கந்தளாய் 93ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த மக்களால் இன்று (13.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யானைகளின் அச்சுறுத்தல்
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள 93ஆம் கட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

காட்டு யானைகள் தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்து நெல் வயல்கள் மற்றும் தென்னை, வாழை போன்றவை அழித்து வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், இரவு நேரங்களில் யானைகள் வீடுகளுக்கு அருகில் வருவதால், உயிருக்குப் பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கோரிக்கைகள்
மின்சார வேலி கிராமத்திற்கு மிக அருகில் வரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 93ஆம் கட்டை கிராமத்தை உள்ளடக்கியதாக அது அமைக்கப்படவில்லை. இதனால் யானைகள் எளிதாகக் கிராமத்திற்குள் நுழைந்து விடுகின்றன.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிராமத்தைப் பாதுகாக்க நிரந்தரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். தற்போதுள்ள மின் வேலியை நீடித்து, 93ஆம் கட்டை கிராமத்தையும் முழுமையாக உள்ளடக்கும் வகையில் மின் வேலி அமைக்கப்பட வேண்டும். தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri