ஒட்டுசுட்டான் பொதுமயானம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தல்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் நகரை அண்டியபகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மயானக்காணி மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரிய 25 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரால் இதன்போது உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (03.07.2025) இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ரவிகரன் கருத்து
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25 ஏக்கர் காணிகளையும், அதனோடு இணைந்த பொது மயானத்தையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள மக்கள் இறந்தவர்களின் உடலங்களை பேராறு பொதுமயானத்திற்கு நீண்டதூரம் கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை காணப்படுகின்றது.
இவ்வாறாக பலவழிகளிலும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பப்படுத்துகின்ற நிலமைகளே காணப்படுகின்றன. இந்த நிலமை மாற்றப்படவேண்டும்.
உடனடியாக ஒட்டுசுட்டான் நகர் பகுதியை அண்மித்துள்ள இராணுவமுகாம் அகற்றப்பட்டு பொதுமயானக்காணி உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25 ஏக்கர் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் கருத்து
இதன்போது நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
ஒட்டுசுட்டான் சந்திப் பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த வகையில் தற்போது ஒட்டுசுட்டானில் இயங்கி வரும் நீர்ப்பாசன பிரிவு அலுவலகம் விவசாய திணைக்களத்திற்குரிய காணியிலேயே அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
குறிப்பாக முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிறீஸ்கந்தராசா குறித்த நீர்ப்பாசன திணைக்களத்திற்குரிய காணி விடுவிப்பு விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டார்.
அந்த வகையில் தற்போது ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்கள பிரிவு அலுவலகம் அமைக்கப்படுவதற்கு முன்னர், உரிய இராணுவ அதிகாரிகளுடன் பேசி பிரதான வீதியுடன் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25 ஏக்கர் காணிகளிலிருந்து முதற்கட்டமாக இரண்டு ஏக்கர் காணிகளையாவது விடுவித்துத் தரும்படி கோரியிருந்தார்.
இவ்வாறாக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உரிய காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமயானக்காணி மற்றும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய காணி என்பன அரசாங்கத்தால் விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
