அசமந்த போக்கில் செயற்படும் அரச உத்தியோகத்தர்கள்: காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி பகிரங்க குற்றச்சாட்டு
மாவட்ட செயலகமாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அங்கே பணிபுரிகின்றவர்கள் அரசாங்கத்துக்கு சார்ந்து வேலை செய்வதற்கு மக்களிடத்தே ஓடி வருகின்றார்கள். அவர்களுடைய பணிகளை அவர்கள் சீராக செய்வதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (07.07.2023) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு செல்லும் பொது மக்களை அதிகாரிகள் பல மணிநேரம் காக்கவைத்து அவர்கள் தொலைபேசியுடன் கதைத்துக்கொண்டிருப்பார்கள்.தங்களுடைய காரியங்கள் ஆகும் வரைக்கும் அவர்கள் மக்களை திரும்பிப்பார்க்க மாட்டார்கள்.
ஒரு சில கிராம சேவையாளர்கள் கூட இந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மண்ணில் என்ன நடந்தது என்பதை நன்கு புரிந்து கொண்டவர்கள்.பல வேலைகளுக்கு முகம் கொடுப்பதை அறியமுடியவில்லை. ஒரு சில கிராம சேவையாளர்கள், இன்றைக்கு எங்களது பிள்ளைகளது செய்தி வருமா என்று ஏக்கத்துடன் இருக்கின்ற தாய்மார்கள், உறவுகளை, உங்களுக்கு சொத்து இழப்பு என்று கூறி ஓ.எம்.பி அலுவலகத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்து விட்டு பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
பொறுப்பற்ற செயற்பாடு
சொத்து இழப்பீடு என்று சொன்னால் எத்தனை ஆடுகள், எத்தனை மாடுகள், எத்தனை கோழிகள், உங்களது வீட்டின் பெறுமதி என்ன, உங்களது அங்கத்தவர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்? எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விபரத்தை தந்திரமாக எடுத்து அவர்களுடைய கையெழுத்தை வாங்குகின்றார்கள்.
மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள் மக்களுடைய நலன்களை பேண வந்தவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதினை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.
உத்தியோகத்தர்கள் தங்களது உத்தியோகங்களை உண்மைக்கும் நீதிக்குமாக பயன்படுத்த வேண்டும்.இதைத்தான் நாங்கள் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் ஆகியவற்றின் இடத்தில் எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |