வரி செலுத்துவதில் பொதுமக்களும் நிறுவனங்களும் அலட்சியம்
இலங்கையில் வரி செலுத்தும் விடயத்தில் பொதுமக்களும் வர்த்தக நிறுவனங்களும் அலட்சியம் காட்டுவதாக நாடாளுமன்ற சிறப்புக் குழு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் மொத்தமாக 500,000 தனிநபர் வருமான வரி கோப்புகளில் இருந்து 31,000 பேர் மட்டுமே வரி செலுத்துவதாகத் தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் அறிக்கையின்படி, நாட்டில் 105,000 பதிவுசெய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் இருப்பதாகவும், ஆனால் 82 சதவீதம் வரி வருமானம் 382 நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களம்
வரையறுக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள
போதிலும் 328 நிறுவனங்களிலிருந்தே வரி வருமானம் கிடைக்கப்பெறுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வின் போது பணவீக்கம், நாட்டின் கையிருப்பு மற்றும் அரசாங்கத்தின் வருமானம் ஆகியவற்றை உகந்த நிலையில் பேணுவது முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, அரச வருமானத்தை அதிகரிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக இலங்கை சுங்க, கலால் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் தமது குழு தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டிய 904 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |