வாழ்வை இழந்த தமிழர்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை முகம்
தற்போது பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் தொடர்பான கோரிக்கைகள் மீண்டும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கோரிக்கைகள் ஒன்றும் புதிதல்ல. இலங்கை அரசை நோக்கி மனிவுரிமைகள் காப்பாளர்களால் மிக நீண்டகாலமாகவே முன்வைக்கப்படும் கோரிக்கைதான்.
காலச் சுழற்சியில் தற்போது மீளவும் வந்திருக்கிறது. வழமையாக இதுவொரு கோரிக்கையாக முன்வைக்கப்படும். இம்முறை பல்வேறு நலன்களின் அடிப்படையிலான முன்நிபந்தனையாக பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
வாழ்வை இழந்த தமிழர்கள்
உள்நாட்டளவிலும், சர்வதேச அளவிலும் இலங்கை அரசுக்கும் அதன் பாதுகாப்புத் தரப்பினருக்கும் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்திவரும் இச்சட்டமானது 1979 ஆம் ஆண்டிலிருந்து இங்கு நடைமுறையில் உள்ளது. பிரிவினைவாத நோக்கில் கிளர்ச்சிகளில் ஈடுபடும் தரப்பினரைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் பின்நாட்களில், தமிழீழ விடுதலைப்புலிகளையும், அரசுக்கு எதிரான போராட்டங்களையும் தடைசெய்யவே இந்தச் சட்டம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. பிணையற்ற கைது, சந்தேகநபர்களை 18 மாதங்கள் வரையில் தடுத்துவைத்து விசாரணை செய்தல் போன்றவையே இந்தச் சட்டத்தின் சாரங்களாகும். இதனால் அப்பாவி தமிழர்கள் பலர் தண்டனைக்குள்ளானார்கள்.
இச்சட்டதின் விளைவாகப் பல தசாப்தங்கள் தண்டனை பெற்ற தமிழ் கைதிகள் இருக்கின்றனர். சிறைக்குள்ளேயே மாண்டுபோனவர்கள் இருக்கின்றனர். தம் வாழ்வையும் தம் குடும்பத்தார் வாழ்வையும் தொலைத்த பலர் இருக்கின்றனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் உண்மைமுகத்தை வெளிக்கொணர்ந்த மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும்
மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் என்கிற சர்வதேச அமைப்பு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல தசாப்தங்களாக விசாரணைகள் ஏதுமின்றி சிறைகளில் தடுத்துவைக்கப்ட்டிருந்தவர்களின் அறிக்கைகளைப் பெற்றுள்ளது. அவர்கள் மீது விசாரணைகளும் இடம்பெறவில்லை, குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.
2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட புள்ளிவிபரமொன்றில், ஐந்து வருடங்களாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 70 எனவும், 10 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வாக்குமூலம் பெறுவதற்காக சித்திரவதை செய்யப்பட்டதாக மனிவுரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள 17 நபர்களில், 11 பேர் அடித்து துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவத்தினர் கைதிகள் மீது பாலியல் வன்முறை பிரயோகித்தமை, அவர்களின் பிறப்புறுப்புகள் அல்லது மார்பகங்களை சிகரெட்டால் எரித்தமை, அடித்தமை, மின்சார அதிர்ச்சி மூலம் காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட சித்திரவதைகளைக்கூட மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களாக ஆவணப்படுத்தியுள்ளது.
சஹ்ரானால் தப்பித்தது
இதேபோல சர்வதேச அளவில் மனிதவுரிமைகள் விடயத்தில் கவனம்செலுத்தும் பல்வேறு அமைப்புக்களும் இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து உன்னிப்பான கவனத்தைச் செலுத்திவந்திருக்கின்றன. அதன் விளைவாகவே 2017 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தது.
அதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய நல்லாட்சி அரசு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் புதியதொரு சட்டத்தைக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டது.
அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் காட்டப்பட்ட அதே காலப்பகுதியான 2019 இல் சஹ்ரான் குழுவின் இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைதானார்கள். அத்தோடு பயங்கரவாதத் தடைச்சட்ட ஒழிப்பு பிற்போடப்பட்டது.
நாட்டிற்குப் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதால் அதனைக்
கட்டுப்படுத்தும் சட்டத்தின் தேவையும் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
முன்நிபந்தனையாக வந்துநிற்கும் பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம்
இடைப்பட்ட மூன்றாண்டுகளில் பல்வேறு சர்வதேச அமைப்புக்களும் இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தன. தற்போதும் அதேநிலைப்பாட்டில் இருந்துவருகின்றன.
சர்வதேச மனிதவுரிமைகள் பேரவை, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குசார் மனிதவுரிமை அமைப்புக்களும், அதன் அறிக்கையாளர்களும், தூதுவர்களும் இவ்விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.
பயங்கரவாதத் தடைச்சட்ட விடயத்தில்
மாற்றம் ஏற்படுத்தினால் மாத்திரமே இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார
வீழ்ச்சியிலிருந்து தப்பிப்பதற்கு உதவிசெய்வோம் என்கிற அளவில் முன்நிபந்தனை
விதிக்கின்றன.
இது வெறும் நாடகம்
இலங்கை அரசு வேறுவழியே இன்றி இந்நிபந்தனைக்கும் பணிவதுபோல பாசாங்கு காட்டிக்கொண்டிருக்கிறது. தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்கிறவொன்றைக் கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே, நாட்டில் ஏற்படும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்களைக் கட்டுப்படுத்த அவசரகாலத் தடைச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவை நடைமுறையில் உள்ளன.
இப்போது அதற்கு மேலதிகமான அல்லது அதைவிட வலுக்கூடிய மேலுமொரு சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து மேற்குசார் மனிவுரிமைகள் அமைப்புக்கள், நிதியளிப்பாளர்கள் மனிவுரிமைகள் தொடர்பில் கொடுக்கும் அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வேலைத்திட்டங்களில் ஒன்றாகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்படும் தேசியப் பாதுகாப்புச்சட்டமும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனப் பட்டியல்படுத்தப்பட்டுத் தடைசெய்யப்பட்டிருந்த புலம்பெயர் அமைப்புகள், நபர்கள் மீதான தடைநீக்கம் போன்றவைகூட இந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே எனலாம்.
ஒரே நிலைப்பாட்டில் சீனா, இந்தியா
மேற்குசார் மனிதவுரிமைகள் அமைப்புக்களும், நிதியளிப்பாளர்களும் இவ்வாறு முன்நிபந்தனைகளை முன்வைக்கின்றபோதிலும், இலங்கைக்கு அதிக கடன்களை அளித்துவரும் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் பயங்கரவாதத் தடைச்சட்ட விடயத்தில் தொடர் மெளனமே காத்துவருகின்றன.
சீனா தன் வணிகத்தைத் தாண்டி உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதில்லை. உள்நாட்டில் என்னவகையான மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்றாலும் அது குறித்து அக்கறை காட்டுவதில்லை.
அது அந்நாட்டுப் பிரச்சினை, அந்நாட்டவர்களே உள்நாட்டளவில் பார்த்துக்கொள்ளவேண்டும். வெளியார் யாரும் அதில் தலையிடக்கூடாதென்பதே சீனாவின் நிலைப்பாடு. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
காஷ்மீர் போன்ற பகுதிகளில் மோசமான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் இந்தியா ஏனைய நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கருத்துச் சொல்லக்கூடத் தகுதியற்ற நாடு. இந்தப் புரிதலோடு, தன் அரசியல நலன்களைத்தாண்டி எந்த விடயத்திலும் இந்தியா மூக்கைநுழைப்பதில்லை.
அழுத்தம் மேற்கிலிருந்து மாத்திரமே
இந்தச் சாவியும் சிங்களவர்களிடமே உண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் மாற்றம் நிகழவேண்டுமாயின் அது தன் சொந்த மக்களைப் பாதிக்கவேண்டும். இப்போது அந்தப் பாதிப்பிற்கு எதிரான் குரல்கள் தெற்கில் கேட்கத்தொடங்கியிருக்கின்றன.
'கோட்டாகோகம' போராட்டத்தின் வழியே நாட்டில் ஆட்சி மாற்றத்தையும், ஆட்சி முறையியல் மாற்றத்தையும் (System Change) கோரிய பெரும்பான்மையினப் போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந்ததனால் அதற்கு எதிரான கோஷங்களை எழுப்புகின்றனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் கைதானது இந்தப் பேசுபொருளின் வீரியத்தை அதிகரித்திருக்கின்றது. ஊழலற்ற, நீதியான, ஜனநாயக ரீதியான ஆட்சியைக் கோரியே கோட்டாகோகம போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கினார்கள்.
அவர்களின் போராட்டத்தின் பின்னால், இது என் நாடு, அதனை நானே கட்டியெழுப்பவேண்டும், அரசு தவறான பாதையில் போகும்போது அதனை நானே சுட்டிக்காட்டவேண்டும் - என்கிற நம்பிக்கைகள் இருந்தன.
ஆனால் அந்த நம்பிக்கைகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் மீதான அரசின் வன்முறைகளும், பயங்கரவாதத் தடைச்சட்டப் பாய்ச்சலும் அழித்தொழித்துவிட்டன.
இந்நாடு நமக்கானதல்ல, ஆட்சி புரியும் அரசியவாதிகளுக்கு மட்டுமேயானது என்கிற புரிதலைப் போராட்டக்காரர்கள் பெற்றிருக்கின்றனர். சர்வ அதிகாரத்தையுமுடைய அத்தரப்பினரையே பயங்கரவாதத் தடை ச்சட்டம், அவசரகாலத் தடைச்சட்டம் போன்றவை காப்பாற்றி வருகின்றன என்கிற புரிதலைப் போராட்டக்காரர்கள் பெற்றிருக்கின்றனர்.
இந்நாடு இன்று எதிர்நோக்கியிருக்கின்ற பொருளாதார சீரழிவுகளுக்குப் பிரதான காரணமே கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ஊழல்கள்தான்.
அந்த ஊழல்வாதிகளை விசாரிக்கவும், தண்டிக்கவும், பொதுமக்களின் சொத்துக்களை மீளவழங்குமாறும் மக்கள் கோருகின்றனர். இது இலங்கைவாழ் சமூகங்களின் கூட்டுக் கோரிக்கை. அரசினையும், ஆட்சி சூழலையும் மறுசீரமைப்புகுட்படுத்தும் நோக்கிலான இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காதபோது மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதே தன்னியல்பானது.
அதுவே ஜனநாயகம் மக்களுக்கு அளித்திருக்கிற ஒரேயொரு
வாய்ப்பு. அந்த வாய்ப்பையும் கூடப் பயங்கரவாதத் தடைச்சட்டம் மீதான பயப்பீதி
பறித்திருக்கிறது.
எனவேதான் முதல்முறையாக அச்சட்டத்திற்கு எதிராக சிங்களவர்கள் பேசத்
தொடங்கியிருக்கின்றனர். இது பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்க விடயத்தில் ஒரு
நற்சகுனம் எனலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
